அவிநாசி- சேவூர் சாலையில் வேகத்தடை, சென்டர் மீடியா அமைக்கக்கோரி பொது மக்கள் மறியல்

அவிநாசி -சேவூர் சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுவதை தடுக்கும் நடவடிக்கையாக, பட்டறை பேருந்து நிறுத்தம் அருகே வேகத்தடை, சாலையின் நடுவே தடுப்புச் சுவர் (சென்டர் மீடியா) அமைக்கக்கோரி மக்கள் வெள்ளிக்கிழமை
சாலை மறியலில் ஈடுபட்டுள்ள மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள போலீஸார்
சாலை மறியலில் ஈடுபட்டுள்ள மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள போலீஸார்

அவிநாசி: அவிநாசி -சேவூர் சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுவதை தடுக்கும் நடவடிக்கையாக, பட்டறை பேருந்து நிறுத்தம் அருகே வேகத்தடை, சாலையின் நடுவே தடுப்புச் சுவர் (சென்டர் மீடியா) அமைக்கக்கோரி மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவிநாசி சாலையில் பணியாள்களை ஏற்றிச் செல்லும் பனியன் நிறுவன வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்தி செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

குறிப்பாக, அவிநாசி- சேவூர் சாலை என்பது, கோபி, புளியம்பட்டி, சத்தி, மைசூர், ஆகிய ஊர்களுக்கு செல்லும் முக்கிய பிரதான சாலையாக உள்ளது. இதில் நாள்தோறும் 1000-க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பேருந்துகள், தனியார் பள்ளி வாகனங்கள் செல்வது வழக்கம். மேலும் பின்னலாடை தொழில் நகரமாக விளங்கும் திருப்பூர் அருகாமையில் உள்ளதால் 200-க்கும் மேற்பட்ட பனியன் நிறுவன வாகனங்கள் தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு சென்று வருகிறது. இவ்வாகனங்கள்  காலை, மாலை, இரவு நேரங்களில் சென்று வரும்போது அதிவேகமாக செல்வதாலும், ஒன்றை ஒன்று முந்தி செல்வதாலும் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் அன்றாடம் செல்லும் பாதசாரிகள், இரு சக்கர வாகன ஓட்டிகள் அச்சத்தில் சென்று வருகிறார்கள்.  

ஆகவே, இருபுறமும் வரும் வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்தி செல்லும் போது எதிரே வரும் வாகனத்தின் மீது மோதி கொள்ளாமல் இருக்க சாலையின் நடுவே தடுப்புச் சுவர் (சென்டர் மீடியா) அமைக்க வேண்டும், உடனடியாக வேகத்தடை அமைக்க வேண்டும் எனக் கோரி அவிநாசி - சேவூர் சாலை பட்டறை பேருந்து நிறுத்தம் அருகே மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகி மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com