
சென்னை: ஆவடி அருகே மின்சார ரயில் பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில், ரயில் ஓட்டுநரின் கவனக்குறைவே காரணம் என்று தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கௌசல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
ஆவடி அருகே, ரயில் பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளான இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரயில்வே கூடுதல் பொதுமேலாளர் கௌசல் கிஷோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ரயில் விபத்துக்கு ஓட்டுநரின் கவனக்குறைவே காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
இதையும் படிக்க.. நினைவிழந்து வென்டிலேட்டரில் இருந்த கர்ப்பிணிக்கு பிரசவம்
திருவள்ளூர் வழித்தடத்தில் உள்ள அண்ணனூர் பணிமனையிலிருந்து ஆவடி ரயில் நிலையத்துக்குக் கொண்டு வரப்பட்ட ரயில் ஆவடி ரயில் நிலையத்தில் நிற்க வேண்டியது, ஆனால், ஆவடி ரயில் நிலையத்தில் நிற்காமல் சென்றுள்ளது. அதன்பிறகே இருப்புப் பாதையை விட்டு ரயில் பெட்டிகள் கீழே இறங்கி விபத்து நேரிட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை சென்டிரல் - திருவள்ளூர் வழித்தடத்தில், ஆவடி ரயில்நிலையம் அருகே, காலி ரயில் பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் அவ்வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஆவடி ரயில் நிலையம் அருகே செவ்வாய்கிழமை காலை 5.40 மணிக்கு, பணிமனையில் இருந்து வந்த மின்சார ரயில் எதிர்பாராத வகையில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதால், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த அண்ணனூர் ரயில்வே பணிமனையில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை ஆவடி ரயில் நிலையத்திற்கு மின்சார ரயில் வந்து கொண்டிருந்து. இந்த ரயிலின் 3 பெட்டிகள் திடீரென்று தடம்புரண்டன.
இதில் பயணிகள் இல்லாததால், உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. இதனால் திருவள்ளூர், அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சென்னைக்கு செல்லும் புறநகர் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், ரயில்வே ஊழியர்கள் மூலம் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்ட ரயில் பெட்டிகளை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் ஆவடியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நோக்கி வரும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், புறநகர் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளனதால், வந்தே பாரத், சதாப்தி உள்ளிட்ட விரைவு ரயில்கள் சென்னையிலிருந்து புறப்படுவதிலும் சிக்கல் ஏற்பட்டது. இதனால், சதாப்தி, பிருந்தாவன், இரண்டடுக்கு விரைவு ரயில் உள்ளிட்டவற்றின் புறப்பாட்டு நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
புறநகர் மின்சார ரயில்கள் சிலவும் விரைவு ரயில் வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.