
கம்பம்: ஸ்டாலின் திமுக மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழியாக இதுவரை ரூ.40 கோடி வழங்கியுள்ளதாக கம்பத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள நடராஜன் திருமண மண்டபத்தில் திமுக சாா்பில் கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு என்.ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ தலைமை வகித்தார், வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்செல்வன் வரவேற்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு திமுக மூத்த உறுப்பினர்கள் 1, 100 பேருக்கு ரொக்கம், பாராட்டுச் சான்றிதழ் அடங்கிய பொற்கிழியை வழங்கி பேசினாா்.
இதையும் படிக்க | 2,222 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு!
அப்போது, அமைச்சராக பொறுப்பேற்று தேனி மாவட்டத்திற்கு முதன்முறையாக வந்துள்ளேன். கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும் என்றால் மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்க வேண்டும். அப்படி என்றால் நான் வருகிறேன் என்றேன். அதன்படி, கடந்த 2 ஆண்டுகளாக மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து ரூ. 40 கோடி வரை வழங்கியுள்ளோம்.
பெரியார், அண்ணாவை உங்கள் வடிவில் பார்க்கிறேன். வரும் டிசம்பர் மாதம் சேலத்தில் இளைஞர் அணி மாநாடு நடைபெறுகிறது. அதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற வேண்டும் என்று பேசினார்.
நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, தேர்தல் பணிக்குழு உறுப்பினர் பெ.செல்வேந்திரன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆ.மகாராஜன், சரவணக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...