காளையார்கோவிலில் மருதுபாண்டியர்களின் 222-வது குருபூஜை விழா

மருதுபாண்டியர்களின் 222−ஆவது குருபூஜையையொட்டி, காளையார்கோவிலில் உள்ள நினைவிடத்தில் அரசியல் கட்சியினர், சமுதாய அமைப்பினர், பொதுமக்கள் வெள்ளிக்கிழமை மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 
காளையார்கோவிலில் மருதுபாண்டியர்களின் நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அஞ்சலி.
காளையார்கோவிலில் மருதுபாண்டியர்களின் நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அஞ்சலி.

சிவகங்கை: விடுதலைப் போராட்ட வீரர்களான மருதுபாண்டியர்களின் 222−ஆவது குருபூஜையையொட்டி, சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் உள்ள நினைவிடத்தில் அரசியல் கட்சியினர், சமுதாய அமைப்பினர், பொதுமக்கள் வெள்ளிக்கிழமை மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 

மருதுபாண்டியர்களின் நினைவு தினம் அக். 24 இல் அரசு விழாவாக சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள நினைவு மண்டபத்தில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, அக்.27, காளையார்கோவிலில் உள்ள அவரது நினைவிடத்தில் சமுதாய அமைப்பின் சார்பில் குருபூஜை விழா நடைபெறுவது வழக்கம். 

அதன்படி, காளையார்கோவிலில் உள்ள மருதுபாண்டியர்கள் நினைவிடத்தில் வெள்ளிக்கிழமை காலை குருபூஜை விழா யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, மருதுபாண்டியர்களின் சிலைக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

இவ்விழாவில், காளையார்கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதியைச் சேர்ந்த சமுதாய அமைப்பினர், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பால்குடம், சந்தனக்குடம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். 

அதைத்தொடர்ந்து, சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும், அதிமுகவின் சிவகங்கை மாவட்டச் செயலருமான பி.ஆர்.செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் க. பாஸ்கரன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுக சார்பில் முன்னாள் எம்பி பவானி ராஜேந்திரன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அதைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட மருதுபாண்டியர்கள் பேரவை, மருது சேனை மற்றும் சமுதாய அமைப்பினர், பொதுமக்கள் என ஏராளமானோர் மருதுபாண்டியர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதில், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் 3000−க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com