
"மாநில அரசால் அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதப்படுத்தும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாடுகள் சட்டவிரோதம்' என அறிவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு ரிட் மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழக அரசுக்கும், ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில், ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்துள்ளது. தமிழக அரசு வழக்குரைஞர் சபரிஷ் சுப்ரமணியன் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காகவும், பரிசீலனைக்காகவும் ஆளுநருக்கு அனுப்பப்பட்ட 12 மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. அரசியல் சாசனக் கடமையை நிறைவேற்றாமல் தாமதப்படுத்துவது, பரிசீலிக்கத் தவறுவது, செயல்படாமல் இருப்பது, புறக்கணிப்பது போன்ற நடவடிக்கைகளில் அவர் ஈடுபடுகிறார்.
அவரது கையொப்பத்துக்காக மாநில அரசால் அனுப்பப்படும் கோப்புகள், உத்தரவுகள், கொள்கைத் திட்டங்கள் ஆகியவற்றையும் அவர் பரிசீலிக்காமல் நிலுவையில் வைத்துள்ளார்.
இது தவிர, அன்றாட கோப்புகள், நியமன உத்தரவுகள், ஆள்சேர்ப்பு உத்தரவுக்கு ஒப்புதல், ஊழல் தொடர்புடைய முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குத் தொடர அனுமதி அளித்தல் ஆகிய விவகாரங்களிலும் ஆளுநர் அனுமதி அளிக்காமல் உள்ளார். இது அரசு நிர்வாகத்தை முடக்குவதாகவும், மாநில அரசுடன் ஒத்துழைக்காத விரோத மனப்பான்மையை உருவாக்குவதாகவும் உள்ளது.
ஆளுநரின் இந்தச் செயல்பாடுகளைத் தன்னிச்சையானதாகவும், அரசியல் சாசனத்துக்கு எதிரானதாகவும், சட்டவிரோதம் எனவும் அறிவிக்க வேண்டும்.
மேலும், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட மசோதாக்கள், கோப்புகள், அரசு உத்தரவுகள் ஆகியவற்றை ஆளுநர் முடித்துவைக்க காலக்கெடுவை நிர்ணயிக்க உத்தரவிட வேண்டும். தமிழக அரசும், சட்டப்பேரவையும் சந்தித்துவரும் பிரச்னைகளைத் தீர்க்கவே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, அரசியலமைப்பின்படி, மத்திய அரசால் நியமிக்கப்பட்ட மாநில ஆளுநர், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களைப் பரிசீலிப்பதை நியாயமற்ற வகையிலும், அதிகமாகவும் தாமதிப்பதன் மூலம், சட்டப்பேரவை அதன் சட்டமியற்றும் கடமைகளைச் செயல்படுத்தும் திறனைத் தடுத்து, இடையூறு செய்து, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தன்னை ஓர் அரசியல் போட்டியாளராக நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு -316-இன் படி நியமிக்கப்பட வேண்டிய தமிழ்நாடு அரசுப் பணி தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் நியமனங்களுக்கான பல்வேறு விண்ணப்பங்கள் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளன.
புலன் விசாரணை அதிகாரிகள் ஊழலுக்கு முகாந்திர ஆதாரம் இருப்பதைக் கண்டறிந்து, வழக்குத் தொடர அனுமதி கோரிய நிலையில், அதற்கான ஒப்புதலைத் தர மறுப்பதன் மூலம் ஆளுநர் அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார். இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை அனுமதி கோரலும் இடம்பெற்றுள்ளது. இந்த விசாரணைக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்தது.
ஆளுநரின் செயலற்ற தன்மை மாநிலத்தின் அரசியலமைப்புத் தலைமைக்கும் மாநிலத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் இடையே அரசியலமைப்புச்சட்ட முடக்கத்துக்குக் காரணமாகியுள்ளது. தனது அரசியலமைப்புச் செயல்பாடுகளை மேற்கொள்ளாததன் மூலம் குடிமக்களின் தீர்ப்புடன் ஆளுநர் விளையாடி வருகிறார். இந்த விவகாரத்தில் அவருக்குத் தகுந்த உத்தரவுகளை உச்சநீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
பஞ்சாப் அரசும் வழக்கு
பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிராக அந்த மாநிலத்தில் ஆட்சி செய்யும் ஆம் ஆத்மி அரசும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது.
பஞ்சாப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 27 மசோதாக்களில் 22-க்கு மட்டும் ஆளுநர் புரோஹித் அனுமதி அளித்துள்ளார். மூன்று பண மசோதாக்களைத் தாக்கல் செய்ய பஞ்சாப் அரசு சிறப்புப் பேரவைக் கூட்டத்தொடரை கூட்ட அண்மையில் முடிவு செய்தது. இந்த மசோதாக்களைத் தாக்கல் செய்ய ஆளுநர் அனுமதி அளிக்காததால் பேரவைக் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றத்தில் முறையிடப் போவதாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஆளுநருக்கு எதிராக பஞ்சாப் அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழ்நாடு, பஞ்சாப் மாநில அரசுளின் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் ஒன்றாகச் சேர்த்து விசாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.