பல்லடம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான வெங்கடேஷ் தப்பிக்க முயற்சி செய்த நிலையில், காவல்துறையினர் இரு கால்களிலும் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள கள்ளக்கிணறு கிராமத்தைச் சோ்ந்த மோகன்ராஜ் (49), அவரது தாய் புஷ்பவதி (67), சித்தி ரத்தினம்மாள் (58), மோகன்ராஜின் சகோதரரும், கள்ளக்கிணறு பாஜக கிளைத் தலைவருமான செந்தில்குமாா் (47) ஆகியோா் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டனா்.
இச்சம்பவம் தொடா்பாக வழக்கு பதிந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு குண்டடம் பகுதியில் பதுங்கி இருந்த செல்லமுத்து என்பரை கைது செய்யப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை காலை கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதத்தை தொட்டம்பட்டி குடிநீர் மேல்நிலை தொட்டி மேல் மறைத்து வைத்திருப்பதாக கூறி, அதை எடுத்து தருவதாக மேல்நிலை நீர் தேக்க தொட்டி மீது ஏறியுள்ளார்.
அப்போது பின்னே சென்ற போலீசாரை தள்ளிவிட்ட செல்லமுத்து நீர்த்தேக்க தொட்டி மேலிருந்து குதித்து தப்ப முயற்சித்ததில் கால் எலும்பு முறிவு ஏற்பட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலும் தலைமறைவாக இருந்த இரண்டு குற்றவாளிகளையும் போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் வெங்கடேஷ் என்கின்ற ராஜ்குமார் மற்றும் சோனை முத்தையாஆகிய இருவரும் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புதன்கிழமை சரணடைந்தனர். அவர்களிடம் பல்லடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நான்காவதாக முக்கிய குற்றவாளியான வெங்கடேஷ் என்பவரது தந்தை ஐயப்பன் தேவர் (53) கொலை செய்வதற்கு ஆயுதம் வழங்கியதற்காக புதன்கிழமை கைது செய்து பல்லடம் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வந்தனர்.
தொடர்ந்து வியாழக்கிழமை முக்கிய குற்றவாளியான வெங்கடேஷ் என்ற ராஜ்குமாரை சம்பவ நடைபெற்ற கள்ளக்கிணறு கிராமத்திற்கு அழைத்து சென்று குற்றச்சம்பவம் நடைபெற்ற இடத்தை அடையாளம் காட்ட சொல்லி விசாரணை நடைபெற்ற போது ராஜ்குமார் தப்பிக்க முயற்சித்துள்ளார்.
அதைத்தொடர்ந்து ராஜ்குமாரை பிடிக்க அவரது இரண்டு கால்களிலும் போலீசார் துப்பாக்கி சுட்டு பிடித்தனர். தற்போது கோவை மருத்துவமனையில் ராஜ்குமார் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.