காற்றில் கம்பு சுற்றும் பாஜக தலைவர்கள்: உதயநிதி ஸ்டாலின்

சனாதன விவகாரம் குறித்து தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்.
உதயநிதி ஸ்டாலின்.

சனாதன விவகாரம் குறித்து தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்-கலைஞர்கள் சங்கம்’ கடந்த 2-ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்த ‘சனாதன ஒழிப்பு’ மாநாட்டில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின் பேசியது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், அமைச்சர் உதயநிதி விளக்கம் அளித்து வெளியிட்ட அறிக்கை:

“ஒட்டுமொத்த இந்தியாவும் ஓரணியில் திரண்டு நின்று, நிராயுதபாணியாக நிற்கும் மத்திய பா.ஜ.க. அரசைக் கேள்வி கேட்க தொடங்கியுள்ள நிலையில், த.மு.எ.க.ச மாநாட்டில் நான் பேசிய பேச்சை, ‘இனப்படுகொலை செய்யத் தூண்டினேன்’ என்று திரித்து அதையே மக்களிடம் இருந்து தங்களைக் காத்துக்கொள்ளும் ஆயுதமாக நினைத்து காற்றில் கம்பு சுற்றிக்கொண்டு இருக்கின்றனர் பா.ஜ.க. தலைவர்கள்.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால், அமித்ஷா போன்ற மத்திய அரசின் அமைச்சர்கள், பா.ஜ.க. ஆளும் மாநில முதலமைச்சர்கள் என யார்யாரோ இந்த அவதூறை மையமாக வைத்து, என் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.

நியாயமாகப் பார்த்தால், மதிப்புக்குரிய பொறுப்பில் இருந்துகொண்டு அவதூறு பரப்பும் இவர்கள் மீது நான்தான் கிரிமினல் வழக்கு, நீதிமன்ற வழக்குகளைத் தொடுக்க வேண்டும். ஆனால், இவர்களுக்குப் பிழைப்பே இதுதான், இதைவிட்டால், பிழைப்பதற்கு அவர்களுக்கு வேறு வழி தெரியாது என்பதால், ‘பிழைத்துப் போகட்டும்’ என்று விட்டுவிட்டேன்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் அவதூறை மட்டுமே நம்பி களமிறங்கியுள்ள மோடி அண்ட் கோ-வை பார்க்கும்போது ஒரு பக்கம் பரிதாபமாகவும் இருக்கிறது.

ஏழை எளிய மக்களின் வாழ்வை உயர்த்தும் ‘புதுமைப்பெண்’ திட்டம் போன்றோ, முதலமைச்சரின் காலைச் சிற்றுண்டி திட்டம் போன்றோ, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் போன்றோ ஏதாவது ஒரு முற்போக்குத் திட்டம் கடந்த 9 ஆண்டுகால மத்திய அரசிடம் இருந்து வந்திருக்கிறதா? மதுரை எய்ம்ஸை கட்டினார்களா? கலைஞர் நூற்றாண்டு நூலகத்தைப் போன்று ஏதாவது அறிவியக்கத்தை முன்னெடுத்தார்களா?

சாமியார்களுக்குத்தான் இந்தக் காலத்தில் அதிக விளம்பரம் தேவைப்படுகிறது. அப்படி ஒரு சாமியார் இடையில் புகுந்து என் தலைக்கு 10 கோடி ரூபாய் விலை வைத்துள்ளார். என் தலையைவிட ‘முற்றும் துறந்தவரிடம் எப்படி 10 கோடி’ என்பதுதான் எனக்கு வியப்பாக இருக்கிறது. தவிர பலர் என் மீது நாட்டின் பல்வேறு காவல் நிலையங்களிலும், மாண்பமை நீதிமன்றங்களிலும் புகார் அளித்து வருவதாகத் தெரிகிறது.

என் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை சட்டத்துறையின் உதவியுடன் சட்டப்படி எதிர்கொள்வேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com