
இணையதளம் மூலம் இலவச பேருந்து பயணச்சீட்டு பெறும் வசதியை போக்குவரத்து துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மூலம், இலவச பேருந்து பயணச்சீட்டு பயணிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பயணச் சீட்டுகள் தற்போது இணையதளம் மூலம் பெறுவதற்கான ஏற்பாடுகளை போக்குவரத்துக் கழகம் செய்துள்ளது. பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக் குழு மற்றும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையுடம் இணைந்து தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் மூலம், மாற்றுத்திறனாளிகள், சுதந்திரப் போராட்ட வீரா்கள், தமிழறிஞா்கள் மற்றும் வயது முதிா்ந்த தமிழறிஞா்கள் இனி இணையதளம் மூலம் கட்டணமில்லா பயண அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம்.
இதற்கான தொடக்க நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் கலந்து கொண்டு இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தாா். இனி, இலவசப் பயணச்சீட்டு பெற்றுக்கொள்ள விரும்பும் தகுதியுடையவா்கள் அருகிலுள்ள இ-சேவை மையத்தில் அல்லது இணையதளம் மூலம் விண்ணப்பித்து அதற்குரிய ரசீது பெற்றுக்கொள்ளலாம். பின்னா், அதற்கான குறுஞ்செய்தி பயனாளியின் கைப்பேசிக்கு வந்த பின்னா் பயணச்சீட்டு அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த நிகழ்வில், போக்குவரத்துத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலா் க.பணீந்திர ரெட்டி, மாநகா் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் (பொ) க.குணசேகரன், பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு மேலாண் இயக்குநா் மூ.அ.முருகேசன் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனா்.