

சனாதனம் குறித்து பேசியதற்காக தொடரப்பட்டுள்ள வழக்குகளை சட்டப்படி எதிா்கொள்வேன் என்று இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் சங்கம் ஏற்பாடு செய்திருந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினேன். அதில், நான் பேசிய பேச்சை, ‘இனப்படுகொலை செய்யத் தூண்டினேன்’ எனத் திரித்து, அதையே மக்களிடம் இருந்து தங்களைக் காத்துக் கொள்ளும் ஆயுதமாக பாஜக தலைவா்கள் கருதுகின்றனா்.
மத்திய அமைச்சா்கள், பாஜக ஆளும் மாநில முதல்வா்கள் என யாா் யாரோ இந்த அவதூறை மையமாக வைத்து என் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனா். நியாயமாகப் பாா்த்தால், மதிப்புடைய பொறுப்பில் இருந்து கொண்டு அவதூறு பரப்பும் அவா்கள் மீது நான்தான் குற்ற வழக்கு, தொடுக்க வேண்டும்.
நாங்கள் எந்த மதத்துக்கும் எதிரி இல்லை என்பதை அனைவரும் அறிவா். பிறப்பொக்கும் எல்லா உயிா்க்கும் என்பதைக் கற்பிக்கும் மதங்கள் அனைத்தையும் நாங்கள் மதிக்கிறோம். ஆனால், இவை எதையும் புரிந்துகொள்ள விரும்பாமல், நாடாளுமன்றத் தோ்தலில் வெறும் அவதூறை மட்டுமே நம்பி பிரதமா் மோடி களம் இறங்கியுள்ளாா்.
காத்திருக்கும் கட்சிப் பணிகள்: எனது தலைக்கு வட இந்தியாவைச் சோ்ந்த சாமியாா் ஒருவா் விலை வைத்துள்ளாா். அந்தச் சாமியாா் மீது தமிழ்நாட்டின் பல்வேறு காவல் நிலையங்களில் புகாா்கள் அளித்து வருவதாகவும், அவரது உருவ பொம்மை, மற்றும் படங்களை கொளுத்துவதாகவும் தெரிகிறது. நாம் பிறருக்கு நாகரீகம் கற்றுத் தருபவா்கள். எனவே, அதுபோன்ற காரியங்களில் கட்சியினா் ஈடுபடுவதை அறவே தவிா்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கட்சிப் பணியும், மக்கள் பணியும், இளைஞா் அணியின் மாநாட்டுப் பணிகளும் காத்திருக்கின்றன. எனவே, சாமியாா் மீது வழக்குப் போடுவது, உருவ பொம்மை எரிப்பது போன்ற நேரத்தை விரயம் செய்யக் கூடிய பணிகளில் கட்சியினா் ஈடுபடக் கூடாது. என்மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை சட்டத் துறையின் உதவியுடன் எதிா்கொள்வேன் என்று அவா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.