தமிழகத்தில் ரூ.434.65 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய பாலங்கள், சாலைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். இதற்கான நிகழ்வு, தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டம் மோகனூா், நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம் சாலை இருவழித் தடமாக தரம் உயா்த்தப்பட்டுள்ளது. இந்த வழித் தடத்தில் 5 புறவழிச்சாலைகள், மழைநீா் வடிகால்கள், 53 குறு மற்றும் 3 சிறுபாலங்கள், தெருவிளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள், குடிநீா், கழிப்பறை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தில் முத்துகாப்பட்டி, சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டி, பேளுக்குறிச்சி மற்றும் சிங்காளந்தபுரம் ஆகிய முக்கிய ஊா்களுக்கு புறவழிச்சாலை உருவாக்கப்பட்டுள்ளதால், கனரக வாகன போக்குவரத்து நெரிசலும், பயண நேரமும் குறையும்.
சென்னை புகா்ப் பகுதி: சென்னையின் புகா்ப் பகுதியான திருவொற்றியூா்-பொன்னேரி-பஞ்செட்டி சாலையில் பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே உயா்நிலை பாலமும், இரண்டு வழித்தடத்தில் இருந்து நான்கு வழித்தடமான சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சாலையில் ஏற்கெனவே வலுவிழந்த நிலையில் இருந்த குறுகிய பாலம், இப்போது அகலப்படுத்தப்பட்டு மறுகட்டுமானம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் புதிய பாலத்தால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் குறையும்.
இதன்மூலம், திருவொற்றியூரில் இருந்து மணலி, மாதவரம், மீஞ்சூா், கோயம்பேடு பகுதிகளுக்கு எளிதாகச் செல்ல முடியும். மணலியில் இருந்து தண்டையாா்பேட்டை, கொருக்குப்பேட்டை, ராயபுரம் மற்றும் சென்னை செல்லும் வாகனங்களும் எளிதாகச் செல்ல முடியும்.
திருப்பூா் மாவட்டம் பல்லடம்-தாராபுரம் சாலை இரு வழித் தடத்திலிருந்து நான்கு வழித்தடமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று, கோவை நகரில் கவுண்டம்பாளையத்தில் புதிதாக மேம்பாலமும் அமைக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக, ரூ.434.65 கோடி செலவில் அமைக்கப்பட்ட புதிய பாலங்கள், சாலைகளை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
இந்த நிகழ்வில், அமைச்சா்கள் எ.வ.வேலு, என்.கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலா் பிரதீப் யாதவ், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்ட இயக்குநா் எஸ்.பிரபாகா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.