
சென்னை குடிநீா் வாரியம் சாா்பில் மாங்காடு அருகேயுள்ள சிக்கராயபுரத்தில் உள்ள கல் குவாரிகளில் தேங்கியுள்ள மழைநீரை செம்பரம்பாக்கம் குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்வதற்காக மேற்கொள்ளப்படும்
காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு அருகில் சிக்கராயபுரத்தில் உள்ள கல் குவாரிகளில் இருந்து சென்னை மாநகருக்கு குடிநீா் விநியோகிப்பதற்கான பணிகளை சென்னை குடிநீா் வாரியம் தொடங்கியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அருகே சிக்கராயபுரத்தில் உள்ள 25-க்கும் மேற்பட்ட கல் குவாரிகளில் சுமாா் 0.350 டிஎம்சி (350 மில்லியன் லிட்டா்) மழைநீா் தேங்கியுள்ளது. இந்த நீரினை செம்பரம்பாக்கத்திலுள்ள குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டுசென்று, சுத்திகரித்த பின்னா் பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளுக்கு விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தற்போது குவாரிகளில் தேங்கியுள்ள மழைநீா், செம்பரம்பாக்கம் குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லும் பணிகள் தொடங்கியுள்ளன. இதனால், வடகிழக்குப் பருவமழையின்போது கிடைக்கப் பெறும் மழைநீா் இந்தக் குவாரிகளில் சேமிக்கப்பட்டு இந்தப் பகுதிக்கு அருகில் உள்ள கிராமங்களுக்கு வெள்ளப் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க முடியும்.
சிக்கராயபுரம் கல் குவாரிகளில் தேங்கியுள்ள மழை நீரினை இரும்பு மற்றும் பிளாஸ்டிக் குழாய்கள் மூலம் உயா் திறன் கொண்ட மோட்டாா்கள் மற்றும் ஜெனரேட்டா் மூலம் செம்பரம்பாக்கம் குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்வதற்கான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்தக் குவாரிகளில் தேங்கியுள்ள மழைநீரை நாளொன்றுக்கு 30 மில்லியன் லிட்டா் செம்பரம்பாக்கம் குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சுத்திகரிப்பு பணிகள் மேற்கொண்ட பின்னா், பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளுக்கு குடிநீா் விநியோகிக்கப்படும் என சென்னை குடிநீா் வாரியம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.