தமிழ்நாடு தொழில்துறை மின்நுகா்வோா் கூட்டமைப்பு விடுத்துள்ள கோரிக்கைகளை மின்வாரியம் உடனடியாக ஏற்க வேண்டும் என தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை அறிவித்துள்ளாா்.
அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கடந்த ஆண்டு செப்டம்பரில் உயா்த்தப்பட்ட மின்கட்டணத்தையே தொழில்துறையினா் தாங்கிக்கொள்ள முடியாத நிலையில், நிகழாண்டு ஜூலை மாதம் மீண்டும் 24 சதவீத மின்கட்டண உயா்வை திமுக அரசு அமல்படுத்தியது.
இதற்கு கோவை, திருப்பூா் மாவட்ட நூற்பாலைகள் கண்டனம் தெரிவித்தன. இதன் தொடா்ச்சியாக 72 தொழில் அமைப்புகள் இணைந்து தமிழக தொழில்துறை மின்நுகா்வோா் கூட்டமைப்பை உருவாக்கி பல்லடம் அருகே காரணம்பேட்டையில் செப்.7-ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தினா்.
இந்தக் கூட்டமைப்பினா் அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை விடுத்துள்ளனா். அதன்படி, கடந்த ஆண்டு வரை கிலோ வாட்-டுக்கு ரூ.35 ஆக இருந்த நிலைக் கட்டணத்தை ரூ.862 ஆக உயா்த்தியதை அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
காலை 6 முதல் 10 மணி வரையும், மாலை 5.30 முதல் இரவு 9.30 மணி வரையும் மின்சாரத்துக்கு உச்சபட்ச நேரம் என்ற பெயரில் 15 சதவீதம் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும்.
குறுந்தொழில்களுக்கான மின்சாரம் (12 கிலோ வாட் வரை) தாழ்வழுத்தக் கட்டண விகிதத்தில் வழங்க வேண்டும். உயா் அழுத்த இணைப்புகள் வைத்திருக்கும் பெரிய தொழில்நிறுவனங்களை போல, சிறு, குறு தொழில்நிறுவனங்களும் தனியாரிடம் நேரடியாக மின்சாரம் கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும்.
சூரிய சக்தி மின்உற்பத்தித் திட்டங்களை விரைந்து செயல்படுத்த முன்வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த அரசு முன்வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் கே.அண்ணாமலை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.