Enable Javscript for better performance
ஏ.ஆர். ரஹ்மான் மன்னிப்புக் கேட்டார்! அரசு என்ன செய்யப் போகிறது?- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    ஏ.ஆர். ரஹ்மான் மன்னிப்புக் கேட்டார்! அரசு என்ன செய்யப் போகிறது?

    By சிவசங்கர்  |   Published On : 11th September 2023 06:23 PM  |   Last Updated : 12th September 2023 11:56 AM  |  அ+அ அ-  |  

    AR-Rahman-Chennai-concert-cancelled

     

    ஞாயிற்றுக்கிழமை காலை தொழுகையை முடித்ததும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்திருப்பார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்குப் பிறகு ரஹ்மானின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடக்கிறது. அன்றைய நாளின் துவக்கத்திலிருந்தே தன் குழுவினருக்கான திட்டங்களை பாடல்களுக்கான வரிசைகளைப் குறித்த விவாதங்களில் பரபரப்பான மனநிலையிலேயே உழன்றிருப்பார்.

    சமூக வலைதளங்களில் பெரிதும் செல்வாக்கைச் செலுத்தும் இரண்டாயிரத்தின் பிள்ளைகளுடைய ஆரவாரத்தைப் பார்க்க, வயது வித்தியாசமில்லாத மற்ற ரசிகர்களின் மகிழ்ச்சியைக் காண ரஹ்மான் காத்திருந்தார். எப்படிப் பார்த்தாலும் செப்.10 ஆம் தேதி மாலை அவர் இசை வாழ்வின் முக்கியமான நாள். காரணம், அவர் இசை நிகழ்ச்சி நடத்தாத இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் புதிய தலைமுறையினர் இசைத்துணுக்குகளைக் கூட கொண்டாடும் ‘வைப்ஸ்’ (vibes) பரவசத்திற்குள் நுழைந்துவிட்டனர். அதன் தாக்கம் நம் ரசிகர்களிடையே எந்த அளவிற்கு உள்ளது என்பதையும் அறியலாம். மேலும், உலகளவில் இசை நிகழ்ச்சிகளை நடத்திய ரஹ்மான் நீண்ட இடைவேளைக்குப் பின் சொந்த ஊரில் தன் மக்களைக் காண்கிறார்.

    திட்டமிட்டபடியே, சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள பனையூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்ச்சி துவங்குகிறது. இருளை விரட்டும் வாண வேடிக்கைகளின் அழகில், வண்ண விளக்குகளின் பிரகாசத்தில் மேடையில் தோன்றிய அல்லா ரக்கா ரஹ்மானின் குரல், ‘மறக்குமா நெஞ்சம்..’ என்றதும் கூடியிருந்த பல்லாயிரம் ரசிகர்கள் ஆரவாரம் செய்கின்றனர். இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களிடையே எழுந்த குரல் அப்பகுதியையே அதிர வைத்திருக்கிறது. ‘முக்காலா’ பாடலுக்கு பலரும் இருக்கைகளிலிருந்து துள்ளி எழுந்து நடனமாடுகிறார்கள். ஒவ்வொரு பாடல் முடிந்ததும் விசில் சத்தங்கள் ஈசிஆர் சாலை வரை வந்து செல்கிறது.

    தொடர்ந்து, பிரதான பின்னணிப் பாடகர்கள் பாடல்களைப் பாட, தன் கையில் சிறிய பியானோ இசைக்கருவியை சுமந்தபடி மேடையில் அசைந்து கொண்டிருந்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஹாரன் சப்தங்களால்  ஒரு கலவரமே நடந்துகொண்டிருக்கிறது என்பது நிச்சயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

    ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி கடந்த ஆக.12 ஆம் தேதியே சென்னையில் நடைபெற வேண்டியது. அன்று பெய்த கனமழையால், அந்நிகழ்ச்சி ரத்து செய்யப்படுகிறது. கச்சேரியைக் காண சென்னையிலிருந்து மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ரசிகர்கள் வந்திருந்தனர். சற்றும் எதிர்பாராத இந்த இயற்கை இடையூறால் அனைவரும் ஏமாற்றத்துடனே வீடு திரும்பினர். பின், செப்.10 ஆம் தேதி திட்டமிட்டபடி இசை நிகழ்ச்சி நடைபெறும் என்றும் ரசிகர்கள் தங்கள் பழைய நுழைவுச்சீட்டுகளை பத்திரமாக வைத்துக்கொள்ளவும் என்கிற அறிவிப்பை இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த ஏசிடிசி ஈவண்ட்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

     ஆனால், பிரச்னையையும் அவர்களே துவங்கி வைத்திருக்கின்றனர். அதாவது, ஆக.12 ஆம் தேதி நிகழ்ச்சிக்கான பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்கள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துள்ளது.  இது தெரிந்தும், இணையம் வாயிலாக மேற்கொண்டு நுழைவுச் சீட்டு விற்பனையை திறந்துள்ளது ஒருங்கிணைப்பு நிர்வாகம்! குறிப்பாக, சனிக்கிழமை காலை வரை டிக்கெட்கள் விற்றுக்கொண்டே இருந்ததாக ரசிகர்கள் பலரும் குற்றம்சாட்டுகின்றனர்.

    இதையும் படிக்க: நான் பலியாடு ஆகிறேன்: ஏ.ஆர். ரஹ்மான்

    வெள்ளி, தங்கம், வைரம், பிளாட்டினம் என ரூ.2,000 இருந்து ரூ.15 ஆயிரம் வரை டிக்கெட் தொகைகள் வசூலிக்கப்பட்டுள்ளன. இதுபோக, விஐபி டிக்கெட் தொகை தனி. இங்கு நடந்தது, நூறு பேர் அமர வேண்டிய இருக்கைகளை நோக்கி முன்னூறு பேர் வந்துள்ளனர். யாரெல்லாம் டிக்கெட் வாங்கி இரவு  நிகழ்ச்சிக்கு மாலையே சென்றார்களோ அவர்களே இடம்பிடித்திருக்கின்றனர். சரியான நேரத்திற்கு வந்தவர்கள்கூட திரும்பிச் செல்லும் அவலமே நேர்ந்திருக்கிறது.

    குறிப்பாக, அனைத்து இருக்கைகளும் நிறைந்தபின்பும் நிகழ்விடம் நோக்கி ஆயிரக்கணக்காணோர்  வந்ததால் தாங்கள் ஏமாற்றப்பட்டோம் என்பதை ரசிகர்கள் உணர்ந்திருக்கின்றனர்.

    நியாயமாகப் பார்த்தால் ரூ.2000 கொடுத்து டிக்கெட் வாங்கியவர்களுக்கு ஒரு நுழைவு வாசலும் அதற்கடுத்த தொகைகளுக்கும் தனித்தனி நுழைவுகள் வைத்திருக்க வேண்டும். ஆனால், எல்லாருக்கும் ஒரே நுழைவை வைத்திருந்திருக்கிறது ஏசிடிசி ஈவண்ட்ஸ். இதில்தான் பெரிய குளறுபடி நடந்திருக்கிறது.

    இதனால், டிக்கெட் வாங்கிய பலரும் இடமும் இருக்கைகளும் இல்லாததால் உள்ளே நுழைய முடியாமல் அவதிப்பட்டுள்ளனர். சிலர், ஆயிரங்கள் செலவு செய்து பெற்ற டிக்கெட்களை ரூ.200, ரூ.300-க்கு விற்றும் சென்றிருக்கிறார்கள். சொல்லப்போனால், பல ரசிகர்கள் உயிர் பிழைத்தால்போதும் என நெரிசலிலிருந்து தப்பியிருக்கின்றனர்.

    இவ்வளவு தொகை கொடுத்து டிக்கெட் வாங்கினாலும் வாகனங்களை நிறுத்துவதற்கும் தனிக்கட்டணம் வசூலித்திருக்கிறார்கள். மேலும், நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் பார்க்கிங் வசதியும் குறைவாகவே இருந்திருக்கிறது. இந்தச் சூழலில்தான் ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்து குடும்பத்துடன் நிகழ்ச்சியைக் காண ஆவலுடன் கிளம்பிய பலர் குறைந்தது 5 மணி நேரமாக கிழக்குக் கடற்கரை சாலையை அங்குலம் அங்குலமாக நகர்ந்த கொடுமையையும் அனுபவித்திருக்கின்றனர்.

    இதெல்லாம் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க மறுபுறம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் 10 கிமீ வரை கடுமையான போக்குவரத்து நெரிசல். பரிதாபமாக ரசிகர் ஒருவர், “நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திற்கு ஆறு கிலோமீட்டர் முன்பாகவே 300 மீட்டரைக் கடக்க ஒன்றரை மணி நேரம் ஆனது” என்றதுடன் நிகழ்ச்சியைப் பார்க்க பேருந்திலிருந்து இறங்கி ஓடத்தொடங்கினேன் என நொந்து பதிவிட்டுள்ளார். இப்படி ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பல மணி நேரமாக சாலையில் திணறிக்கொண்டிருக்க ஆவேசமான ரசிகர்கள் சாலையில் நின்றபடியே காவல்துறையினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபடுவது பத்திரிகையாளர்களிடம் ஆதங்கங்களை வெளிப்படுத்துவது என அப்பகுதியே திணறியிருக்கிறது.

    சந்தேகமில்லாமல், நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த நிறுவத்திற்கு இந்த பிரச்னையில் மிகப்பெரிய பங்கு இருக்கிறது. இவ்வளவு பெரிய கூட்டத்தைக் கட்டுப்பட்ட எந்த நடவடிக்கையும் திட்டத்தையும் அவர்கள் வைத்திருக்கவில்லை என்றே தெரிகிறது.

    நேற்றிலிருந்து சமூக வலைதளங்களில் ஏ.ஆர்.ரஹ்மான் சேர்த்து வைத்திருந்த புகழ் கேள்விக்குள்ளாகிக் கொண்டிருக்கிறது. நிலைமையை உணர்ந்த அவர், ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நியாயம் கிடைக்கும் என்கிற விதத்தில் தன் கருத்தைக் கூறிவிட்டார். முக்கியமாக, இந்தக்  குற்றச்சாட்டுகளுக்கு நானே பலிகடாவாகிறேன் என அவரே எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டார். சம்பந்தப்பட்ட ஒருங்கிணைப்பு நிறுவனமும் மன்னிப்பு கோரியுள்ளது.

    ஆனால், இந்த வாகன நெரிசலுக்கு, பாதுகாப்பு குளறுபடிகளுக்கு ஏ.ஆர்.ரஹ்மானும் அந்த நிர்வாகமும் மட்டும்தான் காரணமா? அரசும் இந்த பிரச்னையின் சுமையை சுமக்கத்தான் வேண்டும். கிழக்குக் கடற்கரைச் சாலையில் மதியத்திலிருந்து நள்ளிரவு வரை வாகன நெரிசலில் சிக்கியவர்களில் தமிழக முதல்வர் காரும் ஒன்று எனக் கூறப்படுகிறது. நாட்டின் பெரும் நகரங்களில் சென்னையின் இடம் தனித்துவமானது. இப்படியான, நகரத்தில் சிறப்பான சாலை அமைப்பு என்றால் அது கிழக்குக் கடற்கரைச் சாலைதான். நேர்த்தியான பராமரிப்பு, போக்குவரத்தைக் கட்டுக்குள் வைக்கும் சிக்னல் அமைப்புகள், இருபுறமும் வாகனங்கள் செல்வதற்கான விரிவான சாலை என ஈசிஆர் இருந்தும் காவலர்களால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கான நெரிசல் உருவாகியிருக்கிறது.

    AR Rahman Chennai concert earns flak for poor management, no chairs -  Hindustan Times

    இதற்கு முக்கியக் காரணம், சென்னையில்  கலை நிகழ்ச்சிகளை பெரிய அளவில் நடத்த விசாலமான அரங்குகள் என எதுவும் இல்லை. மழைவந்தால் ஓடி ஒளியும் நிலையிலும் ஒருங்கிணைப்பாளர்களின் பதற்றத்தாலுமே பெரும்பாலான நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. குறிப்பாக, பாதுகாப்பு ஏற்பாடுகள். மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சியில் சுமார் 30 ஆயிரம் மக்களாவது வந்திருப்பார்கள் என்கிறார்கள். இத்தனை பேரின் பாதுகாப்பிற்கு ஒரு தனியார் அமைப்பு மட்டும் பொறுப்பேற்க முடியுமா?

    இதைக் குறித்துப் பேசிய தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், “ சம்பவம் நடந்த இடம் தாம்பரம் காவல் எல்லைக்கு உட்பட்டுள்ளதால் காவல் ஆணையர் அமல்ராஜ் விசாரணையை துவஙகி உள்ளார். இது ஒரு உள்ளரங்க நிகழ்வு என்பதால் காவல்துறை பாதுகாப்பு என்பது தேவையில்லை. ஆனால், கூறப்பட்ட பார்வையாளர்களைவிட அதிகளவில் ஆள்கள் வந்திருப்பதால் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த ஏசிடிசி நிறுவனத்திடம் விசாரணை மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்துள்ளார். அதாவது ஏ.ஆர்.ரஹ்மானும் இச்சம்பவத்திற்கு பதில் சொல்ல வேண்டும்.

    கடந்த ஆக.12 ஆம் தேதி நிகழ்ச்சி ரத்தானதும் ஏ.ஆர்.ரஹ்மான் தன் டிவிட்டர் பக்கத்தில், “மழை காரணமாக சென்னை இசை நிகழ்ச்சியை தள்ளி வைத்திருக்கிறோம். கலை நிகழ்ச்சிகள், மெகா ஷோக்கள் மற்றும் சர்வதேச நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான சிறப்பான உள்கட்டமைப்பை நாம் அரசு மூலம் உருவாக்குவோம் என்று நம்புகிறேன்” எனப் பதிவிட்டார்.

    உடனடியாக, தமிழக முதல்வர் ஸ்டாலின், “ கிழக்குக் கடற்கரைச் சாலையில் விரைவில் அமையவுள்ள கலைஞர் மாநாட்டு மையம் மூலம் இந்தக் குறைகள் நீக்கப்படும். உலகத் தரத்திலான நிகழ்ச்சிகள், விழாக்களை ஒருங்கிணைப்போம். சென்னையின் தனித்த அடையாளமாக இது விளங்கும்” என ரஹ்மானுக்கு பதில் அளித்திருந்தார்.

    தற்போது, மறக்குமா நெஞ்சம் நிகழ்வின் மூலம் இதற்கான தேவையை அரசுத் தரப்பு முழுமையாக உணர்ந்திருக்கும். சரியான நிர்வாகம் என்பது இடையூறு இல்லாத கட்டமைப்புகளைக் கொண்டதாகவே இருக்க முடியும். வாகன நெரிசல், பாதுகாப்பு வசதிகளைக் குறித்த அச்சம் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மனக்கசப்பை அளித்ததுபோல் அரசும் அதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

    ஒரு நகரம் எவ்வளவு பெரிய விரிவு கொண்டதோ அந்த அளவிற்கு கலைஞர்களும் கலையை நாடுபவர்களும் இருக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொண்டு வருங்காலத்தில் முன் எச்சரிக்கையை மேற்கொள்ள அரசுத்தரப்பு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதுதான் பாதிக்கப்பட்டவர்களின் குரலாக இருக்கிறது. எப்படி இருந்தாலும் இது ஒரு பாடம். தன்னால் ஏற்பட்ட கசப்புகளுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் தன் மன்னிப்பைக் கேட்டுக்கொண்டார். அரசு என்ன செய்யப் போகிறது?

    செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp