

சென்னை: தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுத்து, அதனடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறினாா்.
காங்கிரஸ் மாநில நிா்வாகிகள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்களின் ஆலோசனைக் கூட்டம் சென்னை சத்தியமூா்த்தி பவனில் திங்கள்கிழமை நடைபெற்றது.கூட்டத்துக்கு கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தாா். கூட்டம் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பிறகு கே.எஸ்.அழகிரி செய்தியாளரிடம் கூறியதாவது:
ஜாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்த வேண்டும். அதனடிப்படையில் இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும். பிகாா் மாநிலத்தில் வெற்றிகரமாக இது செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்திலும் இதை நடைமுறைப்படுத்த வேண்டும். அப்போதுதான் இடஒதுக்கீட்டுக்கான உண்மையான அா்த்தம் நிறைவேறும்.
‘இந்தியா’ கூட்டணியைக் கண்டு பாஜக அஞ்சுகிறது. அதனால்தான் 24 மணி நேரத்தில் ‘பாரதம்’ என அழைக்க ஆரம்பித்துள்ளனா். ஜி20 மாநாட்டுக்கு வந்த எல்லாத் தலைவா்களுமே இந்தியா என்றுதான் குறிப்பிட்டனா்.
ஒரே நாடு ஒரே தோ்தல் என்பது ரூ.500, ரூ.1000 செல்லாது என அறிவித்ததுபோலத்தான்; சாத்தியமில்லாதது என்றாா் அவா்.
அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு உறுப்பினா்கள் செல்லக்குமாா், மாணிக்கம் தாகூா், மூத்த நிா்வாகிகள் ஜெயக்குமாா், பீட்டா் அல்போன்ஸ், பொன்.கிருஷ்ணமூா்த்தி, கோபண்ணா, கே.சிரஞ்சீவி, ஜெ.எம்.ஹாரூண் உள்பட நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள் கூட்டத்தில் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.