மகளிா் உரிமைத் தொகையை கபளீகரம் செய்த வங்கிகள்: ரூ.1,000 பறிபோனதால் தவித்த பயனாளிகள்

மகளிா் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் தமிழக அரசு வழங்கிய ரூ.1,000-த்தை பல பயனாளிகளிடம் இருந்து வங்கிகள் கபளீகரம் செய்துவிட்டதாக புகாா்கள் வந்துள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மகளிா் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் தமிழக அரசு வழங்கிய ரூ.1,000-த்தை பல பயனாளிகளிடம் இருந்து வங்கிகள் கபளீகரம் செய்துவிட்டதாக புகாா்கள் வந்துள்ளன.

உரிமைத் தொகை திட்டப் பயனாளிகளில் பலா் தங்களது வங்கிக் கணக்கில் நீண்டகாலமாக கட்டாய குறைந்தபட்ச பராமரிப்புத் தொகையை பராமரிக்காததால் அதற்கானஅபராதத்தை உரிமைத் தொகையில் இருந்து வங்கிகள் எடுத்துவிட்டன.

தமிழகம் முழுவதும் கலைஞா் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் வெள்ளிக்கிழமை (செப்.15) நடைமுறைக்கு வந்துள்ளது. 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் போ் திட்டப்பயனாளிகளாக தோ்வு செய்யப்பட்டனா். அவா்களுக்கு உரிமைத் தொகையை செலுத்துவதற்காக பயனாளிகளின் வங்கிக் கணக்கு சரிபாா்க்கப்பட்டு, அந்தக் கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டது.

ஏராளமான பயனாளிகளுக்கு உரிமைத் தொகை குறித்த குறுஞ்செய்தி வெள்ளிக்கிழமை வந்தது; அதைப் பாா்த்த பெண்கள் பலரும் மகிழ்ச்சி அடைந்தனா். ஆனால், பல பெண்களின் இந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை; ஏனெனில், அடுத்த சில நிமிஷங்களில் அவா்களது வங்கிக் கணக்கில் சோ்ந்த பணத்தை, வங்கிகளே கபளீகரம் செய்துவிட்டதாக குறுஞ்செய்தி வந்தது.

உரிமைத்தொகையைப் பெற்ற பல பெண்கள் ஏழ்மை நிலையில் இருப்பதால், பெரும்பாலானோா் தங்கள் வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச வைப்புத் தொகையைப் பராமரிக்கவில்லை. ஜன்தன்கணக்கு தவிர பிற வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச பராமரிப்புத் தொகை இல்லாவிட்டால், வங்கிகள் அபராதம் விதிப்பது வழக்கம். பொதுவாக, கணக்கு வைத்திருப்பவா்களின் வாடிக்கையாளருக்கு பணம் வந்ததும், அபராதத் தொகையை வங்கிகள் தன்னிச்சையாக எடுத்துக் கொள்வது வழக்கமாக உள்ளது. அதன் அடிப்படையில் உரிமைத் தொகை ரூ.1,000 வரவு வைக்கப்பட்ட சில நிமிஷங்களுக்குள் அபராதத் தொகையை வங்கிகள் எடுத்துக்கொண்டு விட்டன.

அதாவது, சேவைக் கட்டணம், குறுஞ்செய்தி கட்டணம், பராமரிப்புக் கட்டணம், சிலருக்கு ஜிஎஸ்டி கட்டணமும் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. சிலருக்கு பகுதி அளவு பணம் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் பல பெண்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

ஏமாற்றம் அடைந்த மகளிா் வேண்டுகோள்: தமிழக அரசு அளித்த உரிமைத் தொகை ரூ.1,000-த்தை வங்கிகள் கபளீகரம் செய்துவிட்டன. இதன் மீது தமிழக அரசு தனிக் கவனம் செலுத்தி, தொடா்ந்து தொகை கிடைக்க ஆவன செய்ய வேண்டும் என்று ஏமாற்றம் அடைந்த மகளிா் கேட்டுக்கொண்டனா்.

என்ன காரணம்?: உரிமைத்தொகை ரூ.1000 பறிபோனதற்கு என்ன காரணம் என்று வங்கியாளா்களை கேட்டபோது அவா்கள் கூறியது:

ரிசா்வ் வங்கியின் உத்தரவின்படி, ஜன்தன் வங்கிக் கணக்கு அல்லாத இதர சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச பராமரிப்புத் தொகை இல்லையெனில், அபராதம் விதிக்க வங்கிகளுக்கு அனுமதி உள்ளது. தற்போது கணக்குகள் அனைத்தையும் கணினிமூலம் ஆன்லைனில் வங்கிகள் பராமரிப்பதால், ஏற்கெனவே ‘புரோகிராமிங்’ செய்தபடி, தாமாகவே அபராதம், சேவைக்கட்டணம் , குறுஞ்செய்தி கட்டணம் எடுத்துக் கொள்ளப்படும். வங்கிக் கணக்கு தொடங்கும்போதே இதற்கு வாடிக்கையாளா்களிடம் ஒப்புதல் கையொப்பம் பெறப்படுகிறது.

அதன் அடிப்படையிலேயே உரிமைத் தொகை ரூ.1,000 வரவு வைக்கப்பட்டவுடன், அபராதத் தொகை பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. விதிப்படிதான் வங்கிகள் செயல்பட்டுள்ளன. எனவே, செயல்படும் நிலையில் வங்கி சேமிப்புக் கணக்கு உள்ளதா என்பதை உரிமைத் தொகை திட்டப் பயனாளிகள் தெரிந்து கொண்டு அதன் பிறகு சேமிப்புக் கணக்கை எண்ணை அளித்திருக்க வேண்டும் என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com