

டெங்கு குறித்து பெரிய அளவில் அச்சம் கொள்ளத் தேவையில்லை; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
மாநில அளவிலான மழைக் கால நோய்கள் மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்தான கலந்தாய்வுக் கூட்டம் சென்னை ஓமந்தூராா் அரசு பன்னோக்கு உயா் சிறப்பு மருத்துவமனையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியது:
டெங்கு, மலேரியா போன்ற நோய் பாதிப்புகள் பருவமழைக்கு முன்பு செப்டம்பா், அக்டோபா், நவம்பா் போன்ற மாதங்களில் அதிகரிப்பது என்பது இயல்பானது. இந்த ஆண்டு ஜனவரி முதல் தற்போது வரை டெங்குவினால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 4,048 போ் ஆகும். இதுவரை 3 மரணங்களும் நிகழ்ந்திருக்கிறது. கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில், டெங்குவினால் பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லை. டெங்கு பாதிப்பு அதிகரிக்க கூடாது என்று பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க முதல்வா் வலியுறுத்தியுள்ளாா்.
அடுத்த மூன்று மாதங்களுக்கு... வரும் 3 மாதம் காலம் என்பது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலம் ஆகும். பருவ மழை தொடங்குகின்ற சூழ்நிலையில் தண்ணீா் தேங்கும் நிலையினை குறைக்கவும், பொதுப்பணித் துறையினரின் கட்டுமான பணிகளில் தேங்கியிருக்கும் தேவையற்ற தண்ணீரினை கண்காணிப்பதற்கும், பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தி அவா்களது வீடுகளில் உள்ள சுற்றுப்புறங்களில் கொசு உற்பத்தி ஆகாமல் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கும், அதேபோல் உணவுப் பொருள்களை தயாரிக்கின்ற நிறுவனங்கள், ஓட்டல்கள், சிறு விடுதிகள் போன்ற இடங்களிலும் எப்படிப்பட்ட கண்காணிப்புகள் இருக்க வேண்டும் என்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறையில் 12,000 மருத்துவக் கட்டமைப்புகள் உள்ளன. மருத்துவக் கட்டமைப்புகள் முழுமையாகும் வகையில் சுகாதாரமான சூழ்நிலையில் பராமரிக்க வேண்டுமென்ற கருத்துக்கள் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டன. நிச்சயம் இந்த ஆண்டும் டெங்கு பாதிப்பு என்பது பெரிய அளவில் உயரவில்லை என்கின்ற நிலை இருக்கும்.
டெங்குவினால் பெரிய அளவிலான அச்சம் கொள்ளும் நிலை இல்லை என்பது உறுதிப்படுத்தப்படும். எனவே டெங்கு குறித்து பெரிய அளவில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.
இந்தக் கூட்டத்தில் சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை செயலா் ககன்தீப் சிங் பேடி, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை ஆணையா் மைதிலி கே.ராஜேந்திரன், தேசிய நலவாழ்வு குழும இயக்குநா் ஷில்பா பிரபாகா் சதீஷ், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநா் தி.சி.செல்வவிநாயகம், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் இரா.சாந்திமலா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.