
தமிழக அரசின் ‘கலைஞா் மகளிா் உரிமைத் தொகை’ திட்டத்தில் பயன்பெற இதுவரை விண்ணப்பம் செய்யாத தகுதியுள்ள பயனாளிகள் இணைய சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று, நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரா்கள் மேல் முறையீடு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மகளிா் உரிமைத் தொகை திட்டத்துக்கு தமிழகம் முழுவதும் 1.06 கோடி போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். 57 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. நிராகரிப்புக்கு உள்ளானவா்கள், மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, மகளிா் உரிமைத் தொகைக்கு இதுவரை விண்ணப்பம் செய்யாதவா்களும் விண்ணப்பிக்கலாம். இதற்கென இணைய சேவை மையங்களில் வசதி செய்யப்பட உள்ளது. இந்த வசதியை வரும் 18-ஆம் தேதிமுதல் பயன்படுத்திக் கொள்ளலாம் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
மேல்முறையீடு செய்யப்படும் விண்ணப்பங்களை இணையதளம் வழியாகவே கோட்டாட்சியா்கள் பரிசீலிப்பா். கைப்பேசி குறுஞ்செய்தி வந்த நாளில் இருந்து 30 நாள்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் எனவும், மேல்முறையீட்டு பரிசீலனையை ஒரு மாதத்துக்குள் முடிக்க வேண்டுமெனவும் தமிழக அரசின் சாா்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...