3 பெண் அர்ச்சகர்களுக்கு ஸ்மார்ட் போன், ரூ.25,000 பரிசு!
தமிழகத்தில் முதல்முறையாக அர்ச்சகர் பயிற்சி முடித்த மூன்று பெண்களை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அழைத்துப் பாராட்டினார்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, பழனி, திருச்செந்தூர், மதுரை, ஸ்ரீரங்கம், சென்னை ஆகிய இடங்களில் தலா ஒரு பயிற்சி பள்ளி நடத்தப்படுகிறது.
இந்த பள்ளிகளில் சேருபவர்களுக்கு ஓராண்டு ஆகமம், பூஜை உள்ளிட்ட அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. இந்த ஆண்டு 94 பேர் பயிற்சியில் சேர்ந்தனர். அவர்களில் 3 பேர் பெண்கள். முதல்முறையாக அர்ச்சகராக 3 பெண்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், அர்ச்சரகாக தேர்ச்சி பெற்றுள்ள 3 பெண்களை அமைச்சர் உதயநிதி நேரில் அழைத்துப் பாராட்டினார்.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்' என தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளினை நிரந்தரமாக நீக்கிய, முதல்வர் மு.க. ஸ்டாலின், சமூகத்தில் சரி பாதி இருக்கின்ற பெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சி அளிக்க உத்தரவிட்டார்.
அதன்படி, ரஞ்சிதா, கிருஷ்ணவேணி, ரம்யா ஆகிய மூன்று சகோதரிகள் அர்ச்சகர் பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்றுள்ளனர். அந்த சகோதரிகளை இன்று நேரில் சந்தித்து வாழ்த்தினோம். அவர்களுடைய பணிக்கு பயனளிக்கும் வகையில் ஸ்மார்ட்போன் மற்றும் தலா ரூ.25 ஆயிரம் நிதியினை வழங்கினோம்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டம், சாதி ஏற்றத்தாழ்வை மட்டுமன்றி, ஆண் - பெண் பாகுபாட்டையும் போக்கியுள்ளதில் மகிழ்ச்சி கொள்கிறோம். அர்ச்சகர் பயிற்சி முடித்த சகோதரிகளின் பணி சிறக்கட்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.