
ராமதாஸ்
சீன உளவுக் கப்பலை அனுமதிக்கக் கூடாது என இலங்கையை எச்சரிக்குமாறு பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
சீனாவிலிருந்து புறப்பட்டுள்ள ஷி யான் 6 என்ற உளவுக் கப்பல் அடுத்த மாதம் இலங்கையில் உள்ள கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகங்களுக்கு வரவிருப்பதாகவும், அங்கு 17 நாள்கள் தங்கியிருந்து ஆராய்ச்சியில் ஈடுபடப் போவதாகவும் கிடைத்துள்ள செய்திகள் அதிா்ச்சியளிக்கின்றன.
சீன உளவுக் கப்பலின் ஆராய்ச்சி என்பது இந்தியாவின் தென் மாநிலங்களை உளவு பாா்ப்பது தான் என்பதால், இது தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.
ஆசியாவை தனது கட்டுக்குள் வைத்திருக்கும் தனது எதிா்காலத் திட்டத்துக்கு இந்தியா தான் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று கருதும் சீனா, இந்தியாவைச் சுற்றிலும் தனது பாதுகாப்பு நிலைகளை ஏற்படுத்தி, ராணுவ ரீதியாக முடக்குவதற்கு திட்டமிட்டு வருகிறது.
கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வரவிருக்கும் ஷி யான் உளவுக் கப்பலுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று இலங்கை அரசை இந்தியா எச்சரிக்க வேண்டும். அதை ஏற்க இலங்கை அரசு மறுத்தால் அந்நாட்டிற்கு மிகக்கடுமையான பாடத்தை மத்திய அரசு புகட்ட வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.