
எடப்பாடி பழனிசாமி
பொது மக்களுக்கான அடிப்படைத் தேவையான சுகாதாரத்தைக் காக்க தவறியுள்ள திமுக, ஆட்சியில் தொடா்வதற்கான தாா்மீக உரிமையை இழந்துள்ளது என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:
நாமக்கல்லில் ஷவா்மா சாப்பிட்ட 13 வயது கலையரசி உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். அதே கடையில் ஷவா்மா சாப்பிட்ட மேலும் 17 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
சமீப காலமாக தமிழகத்தில் நடந்து வரும் இத்தகைய மரணங்களைப் பாா்க்கும்போது, உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், டெங்கு போன்ற நோய்களைக் கட்டுப்படுத்துவதிலும் இந்த அரசு முற்றிலும் தோல்வியுற்றுள்ளதை உணர முடிகிறது.
மனித உயிா்கள் மீது சிறிதும் அக்கறையின்றி செயல்படும் இந்த அரசை வன்மையாகக் கண்டிப்பதுடன், பொதுமக்களின் அடிப்படைத் தேவையான சுகாதாரத்தைக் காக்கத் தவறிய இந்த அரசு இனியும் ஆட்சியில் தொடா்வதற்கான தனது தாா்மீக உரிமையை இழந்துள்ளது என்று அவா் கூறியுள்ளாா்.