கவிஞர் தமிழ்ஒளிக்கு தஞ்சை பல்கலை.யில் சிலை

கவிஞர் தமிழ்ஒளியின் நூற்றாண்டு விழாவையொட்டி, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அவரது மார்பளவு சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 
கவிஞர் தமிழ்ஒளிக்கு தஞ்சை பல்கலை.யில் சிலை
Updated on
1 min read


சென்னை: கவிஞர் தமிழ்ஒளியின் நூற்றாண்டு விழாவையொட்டி, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அவரது மார்பளவு சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 
மேலும், தமிழ்ஒளி பெயரில் போட்டிகளை நடத்த ரூ.50 லட்சம் வைப்புத் தொகையாக வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்ஒளியின் கவிதைகள் தனித்தன்மை வாய்ந்தவை. தொடக்கக் காலத்தில் திராவிடர் கழகத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், பொதுவுடைமைக் கொள்கைகளை உயிர் மூச்சாகக் கொண்டிருந்தார். தமிழ்ஒளியின் சிறுகதைகளில் வரும் கதாபாத்திரங்கள் பெரும்பாலும், ஒடுக்கப்பட்டவர்கள், தொழிலாளர்கள், போராளிகள் என அடித்தட்டு மக்களாகவே இருந்தனர். இடதுசாரி சிந்தனையுள்ள தமது படைப்பாக்கங்களில் கவிஞர் தமிழ்ஒளி ஜாதியத்தையும் விளம்புநிலை மக்களின் விடுதலையையும் பாடினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும் உறுப்பினராக இருந்தார்.
நூற்றாண்டு விழா: கவிஞர் தமிழ்ஒளியின் நூற்றாண்டையொட்டி, அவருக்குச் சிறப்பு செய்ய வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இந்தக் கோரிக்கைகளை ஏற்று, தமிழ்ஒளிக்கு தஞ்சாவூரிலுள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மார்பளவு சிலை அமைக்கப்படும். மேலும், பள்ளி மாணவர்களின் தமிழ் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் ரூ.50 லட்சம் வைப்புத் தொகையாக செலுத்தி, அதில் கிடைக்கும் வட்டித் தொகையில் இருந்து தமிழ் சார்ந்த போட்டிகள் நடத்தப்படும். 
இந்தப் போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு தமிழ்ஒளி பெயரால் பரிசுகள் அளிக்கப்படும்.
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடியை அடுத்த ஆடூர் என்ற கிராமத்தில், கவிஞர் தமிழ்ஒளி பிறந்தார். விஜயரங்கம் என்பது அவரது இயற்பெயர். மகாகவி பாரதியாரின் வழித்தோன்றலாகவும், பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கினார். கவிதைகள் மட்டுமல்லாது, கதைகள், கட்டுரைகள், இலக்கியத் திறனாய்வுகள், மேடை நாடகங்கள், குழந்தைப் பாடல்கள் எனப் பலவற்றை இயற்றினார். அவரது நூற்றாண்டு, வரும் 29}ஆம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி, அவருக்கு சிறப்பு சேர்ப்பதற்கான அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது என அந்த செய்திக் குறிப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இடதுசாரிகள் வரவேற்பு: "கவிஞர் தமிழ்ஒளிக்கு மார்பளவு சிலை, இளைய தலைமுறை அறிந்து கொள்ள ஊக்கமூட்டும் திட்டங்களை தமிழக அரசு அறிவித்தது வரவேற்கத்தக்கது. முதல்வருக்கு பாராட்டுகள்' என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூ. மாநிலச் செயலர் இரா.முத்தரசன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com