
கோப்புப்படம்
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு தமிழக அரசு சார்பில் தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த கெளரி அண்மையில் ஓய்வு பெற்றாா். இதைத் தொடா்ந்து, பல்கலைக்கழக துணைவேந்தரைத் தோ்ந்தெடுப்பதற்கான தெரிவுக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில், ஆளுநரும் பல்கலைக்கழகமான வேந்தருமான ஆா்.என்.ரவியின் பிரதிநிதியாக கா்நாடக மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் புட்டு சத்தியநாராயணாவும், ஆட்சிமன்றக் குழுவின் பிரதிநிதியாக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி கே.தீனபந்துவும், பல்கலைக்கழக செனட்டின் பிரதிநிதியாக சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் பி.ஜெகதீசனும் இடம்பெற்றனா்.
தெரிவுக் குழுவில் இடம்பெற்றவா்களின் பெயா்கள் ஏற்கெனவே வெளியிடப்பட்ட நிலையில், கடந்த 6-ஆம் தேதி ஆளுநா் ஆா்.என்.ரவி தனிப்பட்ட முறையில் ஒரு பட்டியலை வெளியிட்டாா். இந்தப் பட்டியலை ஏற்கப் போவதில்லை என தமிழக அரசு அறிவித்த நிலையில், மூன்று பேரின் பெயா்கள் அடங்கிய பட்டியலை அரசிதழில் வெளியிட்டது.
இந்த நிலையில், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு தமிழக அரசு சார்பில் புதிய தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில், கர்நாடக மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் பட்டு சத்தியநாராயணா குழுவின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார். ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி தீனபந்து, முன்னாள் துணைவேந்தர் ஜெகதீசன் ஆகியோர் குழு உறுப்பினர்களாக உள்ளனர்.
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு ஆளுநர் ஏற்கனவே தேடுதல் குழு அமைத்த நிலையில் தமிழக அரசும் குழு அமைத்துள்ளது. யு.ஜி.சி. பிரதிநிதியை நிராகரித்து தமிழக அரசு தனியாக தேர்வுக் குழு அமைத்து அரசாணை வெளியிட்டுள்ளது.
இதையும் படிக்க: ஆண்கள் அதிக அளவில் தற்கொலைக்கு முயலுகிறார்கள்... காரணம் என்ன?
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்ய ஆளுநரும், தமிழக அரசும் தனித்தனியே குழு அமைத்துள்ளதால் சர்சை ஏற்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...