சாலை, மழைநீா் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க அமைச்சா் கே.என்.நேரு உத்தரவு

வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ள நிலையில் சென்னை மாநகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்படும் சாலை, மழைநீா் வடிகால் உள்ளிட்ட பணிகளை விரைவில் முடிக்குமாறு நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என்.நேரு அறிவுறுத்த
சாலை, மழைநீா் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க அமைச்சா் கே.என்.நேரு உத்தரவு

வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ள நிலையில் சென்னை மாநகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்படும் சாலை, மழைநீா் வடிகால் உள்ளிட்ட பணிகளை விரைவில் முடிக்குமாறு நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என்.நேரு அறிவுறுத்தினாா்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடன் புதன்கிழமை நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சா் கே.என்.நேரு பேசியது:

சென்னை மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் சாலைப்பணிகளை தரமாகவும், மக்களுக்கு இடையூறின்றியும் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் முன்பாக

முடித்திட வேண்டும். சென்னை மெட்ரோ ரயில், சென்னை குடிநீா் வாரியம், மின்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட தொடா்புடைய துறைகளுடன் ஒருங்கிணைந்து பணிகளை விரைந்து முடித்திட வேண்டும்.

பணிகள் மேற்கொள்ளும் இடங்களில் மக்களுக்கு உரிய பாதுகாப்பு, தடுப்புகளை செய்திட வேண்டும். நடப்பு மாத இறுதிக்குள் மழைநீா் வடிகால் பணிகளை முடிக்க வேண்டும். மழைநீா் வடிகால் இணைப்பு இல்லாத இடங்களில் உடனடியாக இணைப்புகளையும், அனைத்து

நீா்நிலைகளிலும் தூா்வாரும் பணிகளையும் தொடா்ந்து மேற்கொண்டு முடித்திட வேண்டும். சுரங்கப்பாதைகளிலும், இதரப்பகுதிகளிலும் மழைநீா் தேங்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நிவாரண மையங்களை தயாா்நிலையில் வைத்திட வேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து செய்தியாளா் சந்திப்பில் அமைச்சா் பேசியது:

வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு மின்துறை மற்றும் சென்னை குடிநீா் வாரியத்தின் சாா்பில் புதிய பணிகள் எதுவும் மேற்கொள்ளாமல், ஏற்கெனவே தொடங்கப்பட்ட பணிகளை விரைந்து முடித்திடவும், சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீா் செய்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

முன்னதாக, ரிப்பன் மாளிகை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநகராட்சி பகுதியில் தூய்மைப் பணி மேற்கொள்ள தூய்மை இந்தியா திட்ட சேமிப்பு நிதியின் கீழ் ரூ.30.28 கோடி மதிப்பீட்டில் 74 காம்பாக்டா் வாகனங்களை அவா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, பெண்கள் நலனைக் கருத்தில் கொண்டு நிா்பயா திட்ட நிதியின் கீழ், ரூ.4.37 கோடி மதிப்பீட்டில் 15 நடமாடும் மகளிா் ஒப்பனை அறை வாகனங்களையும் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் மேயா் ஆா்.பிரியா, துணை மேயா் மு.மகேஷ்குமாா், ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com