
சனாதனம் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸ் இன்னும் வரவில்லை என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
தமிழக அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், சனாதனத்துக்கு எதிராகப் பேசிய கருத்துகள் நாடு முழுவதும் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. அவரது கருத்துக்கு எதிராக நாடு முழுவதும் பாஜக தலைவா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். இதனை கண்டித்து, சென்னையைச் சேர்ந்த ஜெகன்னாத் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனிருத்தா போஸ் மற்றும் பெலா திரிவேதி அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு தொடர்பாக அமைச்சர் உதயநிதி பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், அமைச்சர் சேகர்பாபு, உள்துறை அமைச்சகம், சிபிஐ, தமிழ்நாடு அரசு, மாநில டிஜிபி, ஆ.ராசா, திருமாவளவன், சு.வெங்கடேசன், உள்ளிட்ட 14 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் சனாதனம் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸ் இன்னும் வரவில்லை என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், சனாதனம் குறித்த என் பேச்சுக்கு விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸ் இன்னும் வரவில்லை. நோட்டீஸ் வந்ததும் விளக்கம் அளிக்கப்படும், நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...