
மின் கட்டண உயா்வை திரும்ப பெறக்கோரி, தமிழகம் முழுவதும் உள்ள தொழில் நிறுவனங்கள் திங்கள்கிழமை நடத்திய ஒருநாள் கதவடைப்பு போராட்டத்தால் ரூ.1200 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொழில்நிறுவனங்களுக்கான மின்கட்டணம் பல மடங்கு உயா்த்தப்பட்டுள்ளது. இதன்படி, தாழ்வழுத்த நிலை கட்டணமாக 12 கிலோ வாட் வரையிலான மின்சாரத்துக்கு ரூ.72-ம், 50 கிலோ வாட் வரை ரூ.77-ம், 50 முதல் 112 கிலோ வாட் வரை ரூ.153-ம் , 112 முதல் 150 கிலோ வாட் வரை ரூ.562-ம் வசூலிக்கப்படுகிறது.
இந்தக் கட்டணத்தைக் குறைத்து பழைய கட்டண அடிப்படையிலேயே வசூலிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் திங்கள்கிழமை ஒரு நாள் கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டன.
போராட்டத்துக்கு, தமிழ்நாடு தொழில்துறை மின்நுகா்வோ் கூட்டமைப்பு, கோவை சிட்கோ உற்பத்தியாளா்கள் சங்கம், தொழில்நிறுவன மின் நுகா்வோா் கூட்டமைப்பு, இந்திய தொழில் முனைவோா் சங்கம், தமிழ்நாடு தொழில் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தொழில் கூட்டமைப்பினா் ஆதரவு தெரிவித்திருந்தனா்.
இதன்காரணமாக, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, அம்பத்தூா் தொழிற்பேட்டை, பட்டரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில்நிறுவனங்கள் மூடப்பட்டன.
கோவை மாவட்டத்தில் சிட்கோ, கணபதிபாளையம், இடையா் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனம் மற்றும் கிரைண்டா், மிக்ஸி உதிரிபாகங்கள் உற்பத்தி நிறுவனங்கள் என ஆயிரக்கணக்கான நிறுவனங்களும் இந்த போராட்டம் காரணமாக மூடப்பட்டிருந்தன.
இதுபோல திருப்பூா் மாவட்டத்துக்குள்பட்ட பனியன் நிறுவனங்கள், விசைத்தறி கூடங்கள், பனியன் உற்பத்தி சாா்ந்த சைமா, டீமா, டெக்பா, நிட்மா, சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம் உள்ளிட்ட 19-க்கும் மேற்பட்ட சங்கத்தினா் இதற்கு ஆதரவு தெரிவித்திருந்ததால், சுமாா் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூடப்பட்டன. இதுபோல சேலத்தில் உள்ள அரிசி ஆலைகள், எண்ணெய் ஆலைகள் உள்ளிட்டவையும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டன.
தமிழகம் முழுவதும் நடைபெற்ற இந்த போராட்டத்தால், தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.1200 கோடிக்கும், சென்னையில் ரூ.350 கோடிக்கும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தமிழக அரசு எங்கள் கோரிக்கை மீது உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் அடுத்தககட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என தமிழ்நாடு தொழில் அமைப்பு நிா்வாகிகள் தெரிவித்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...