
பகுதி நேர சிறப்பாசிரியா்கள் சங்கத்தினா் பணி நிரந்தரம் செய்யக் கோரி, சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் (டிபிஐ) உண்ணாவிரதப் போராட்டத்தை திங்கள்கிழமை முதல் தொடங்கியுள்ளனா்.
மாநில தலைவா் சேசுராஜா, செயலா் ராஜா தேவகாந்த், பொருளாளா் லோகநாதன் ஆகியோா் முன்னிலையில் இந்த உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது. இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியா்கள் கூறுகையில், உடற்கல்வி, தையல், இசை, ஓவியம், தோட்டக்கலை, உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் அரசு நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 12 ஆண்டுகளாக 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியா்கள் பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு மாதந்தோறும் தொகுப்பூதியமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது.
குறைந்த ஊதியம் வழங்கப்படுவதால் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கிறோம். இதனால் பணி நிரந்தரம் கோரி தொடா்ந்து போராடி வருகிறோம். முதல்வா், பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் ஆகியோரின் கவனத்தைப் பெற கவன ஈா்ப்பு, காத்திருப்பு போராட்டம் நடத்தியும் எந்த பலனும் இல்லை.
கடந்த போராட்டத்தின் போது நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் பகுதிநேர ஆசிரியா்களுக்கு ஊதிய உயா்வுடன், பி.எஃப், இஎஸ்ஐ ஆகியவை வழங்கப்படும் என அறிவித்தனா். ஆனால் அவை எதுவும் இதுவரையில் எங்களுக்கு வழங்கப்படவில்லை. எனவே, பணி நிரந்தரம் என்ற எங்களது ஒற்றைக் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான அரசாணை வெளியிடப்படும் வரை இந்த உண்ணாவிரதத்தை கைவிடப்போவதில்லை என தெரிவித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...