பள்ளி வகுப்பறைகள் திறப்பு; சுற்றுலாக் கொள்கையை வெளியிட்டார் ஸ்டாலின்

தமிழகத்தில் கட்டி முடிக்கப்பட்ட பள்ளி வகுப்பறைகளை திறந்து வைத்து, கிராம ஊராட்சிக்கான இணையதளத்தையும் தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.
பள்ளி வகுப்பறைகள் திறப்பு; சுற்றுலாக் கொள்கையை வெளியிட்டார் ஸ்டாலின்
Updated on
2 min read


சென்னை: தமிழகத்தில் கட்டி முடிக்கப்பட்ட பள்ளி வகுப்பறைகளை திறந்து வைத்து, கிராம ஊராட்சிக்கான இணையதளத்தையும் தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  இன்று தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 150 கோடி ரூபாய் செலவில் 37 மாவட்டங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள 1000 புதிய வகுப்பறைகளை திறந்து வைத்தார்.

மேலும், கிராம ஊராட்சிக்கு பொதுமக்கள் வரி / கட்டணங்கள் செலுத்துவதற்கான இணையதளம் மற்றும் தமிழ்நாடு எளிமைப்படுத்தபட்ட ஊராட்சிக் கணக்குகள் திட்டத்திற்கான இணையதளம் ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.

ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு சுமார் 800 கோடி மதிப்பீட்டில் 6 ஆயிரம் புதிய வகுப்பறைகள் கட்டப்படும் என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார். இத்திட்டம் “குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்” என்று ஊரகப் பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம், காட்பாடியில் 1.2.2023 அன்று நடைபெற்ற அரசு விழாவில், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிய வகுப்பறைகள் கட்டும் பணிக்கு முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, 8 மாத காலத்தில் முதற்கட்டமாக, குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 150 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள 1000 புதிய வகுப்பறைகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இக்கட்டடங்கள் அனைத்தும் குழந்தை நேய சிறப்பு அமைப்புகளான உயர்த்தப்பட்ட மேற்கூரை, விசாலமான தாழ்வாரம், காற்றோட்டமிக்க ஜன்னல் வசதிகள், வழுக்காத தரைகள், கற்றலை ஊக்குவிக்கும் சுவர் ஓவியங்கள், வாழ்க்கைப் பாடங்கள் போன்றவற்றை உள்ளடக்கியதாகும்.

கிராம ஊராட்சிகளுக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் கட்டணங்கள் இணையவழி மூலம் செலுத்தும் வசதியைத் தொடங்கி வைத்தல். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2022-23ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், கிராம ஊராட்சிகளுக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய வீட்டுவரி, தொழில்வரி, குடிநீர்க் கட்டணம், உரிமக் கட்டணம் போன்றவற்றை தற்போது ஊராட்சி அலுவலகங்களுக்கு நேரில் சென்றோ, ஊராட்சி செயலர் மூலமோ செலுத்த வேண்டியுள்ளது. இச்சேவைகள் அனைத்தும் இணைய வழியில் பெறும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, பொதுமக்கள் கிராம ஊராட்சிகளுக்கு செலுத்த வேண்டிய வீட்டுவரி, தொழில்வரி, குடிநீர்க் கட்டணம், வரியல்லாத கட்டணங்கள் போன்றவற்றை இணைய வழியில் செலுத்தும் வகையில் தேசிய தகவலியல் மையத்தால் (National Informatics centre) உருவாக்கப்பட்டுள்ள https://vptax.tnrd.tn.gov.in/ என்ற வரி செலுத்தும் முனையத்தை (Online Tax Portal) பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்.

இவ்விணையதளத்தின் மூலமாக இணைய வழி கட்டணம் (Online Payment), ரொக்க அட்டைகள் (Debit / ATM Cards Payment), கடன் அட்டைகள் (Credit Card Payment), யுபிஐ கட்டணம் (UPI Payment) மூலம் செலுத்திட முடியும்.

பிறகு, சுற்றுலாத் துறையின் தமிழ்நாடு சுற்றுலாக்கொள்கையை வெளியிட்டுள்ளார். செயலகத்தில், தமிழ்நாட்டில் சுற்றுலாவிற்கு ஒரு புதிய
பரிணாமத்தை அளித்து நாட்டின் முன்னோடி சுற்றுலாதலமாக மாற்றித் துறையினை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்ட “தமிழ்நாடு சுற்றுலா கொள்கை 2023”-யை வெளியிட்டார்.

”தமிழ்நாடு சுற்றுலா கொள்கை” – 2023ன் சிறப்பம்சங்கள்
தொழில் அந்தஸ்து: இந்தக் கொள்கையானது சுற்றுலாத் திட்டங்களுக்கு
தொழில் அந்தஸ்தை வழங்குகிறது, இதன்மூலம் இதுவரை தொழில்துறை
திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட அதே பலன்களை சுற்றுலாத் துறைக்கும் விரிவுபடுத்தி, சுற்றுலாத்துறையில் ஈடுபட்டு வரும் பல்வேறு நிலையிலான பங்குதாரர்களின் நீண்டகால கோரிக்கையை சுற்றுலா கொள்கை பூர்த்தி செய்கிறது.

முன்னுரிமை சுற்றுலா பிரிவுகள்: சாகச சுற்றுலா, பொழுதுபோக்கு சுற்றுலா,
கேரவன் சுற்றுலா, கிராமப்புற மற்றும் தோட்ட சுற்றுலா, கடலோர சுற்றுலா,
கலாச்சார சுற்றுலா, மருத்துவம் மற்றும் ஆரோக்கிய சுற்றுலா, ஆன்மீக சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா, கூட்டங்கள், ஊக்கத்தொகைகள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள் சுற்றுலா, பாரம்பரிய சுற்றுலா மற்றும் திரைப்படச் சுற்றுலா ஆகிய 12 முன்னுரிமை சுற்றுலாப் பிரிவுகளின் வளர்ச்சியினை நோக்கமாக கொண்டுள்ளது.

நிலைப்படுத்தப்பட்ட சுற்றுலா தலங்கள் மற்றும் வழித்தடங்கள் ஆகியவற்றின்
மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, இந்த பகுதிகளில் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் மானியங்கள் அளிக்கப்படும்.

சுற்றுலாத் திட்டங்களுக்கு ஒற்றைச் சாளர அனுமதி: அனைத்து தகுதியான
சுற்றுலா திட்டங்களுக்கும் ஒற்றை சாளர அனுமதியுடன் கூடிய நெறிப்படுத்தப்பட்ட ஒப்புதல் செயல்முறை மேற்கொள்ளப்படும்.
தனியார் முதலீட்டை ஊக்குவிப்பதற்கு தகுதியான சுற்றுலாத்திட்டங்கள்:
தனியார் முதலீட்டை ஊக்குவிப்பதற்காக முக்கிய கவனம் செலுத்தும் அடிப்படையில் பொழுதுபோக்கு பூங்காக்கள், பாரம்பரிய ஹோட்டல்கள், அனுபவமிக்க ஓய்வு விடுதிகள், சுற்றுச்சூழல்-குடிசைகள்/ முகாம்கள், ரோப்வேகன்கள், ஆரோக்கிய ஓய்வு விடுதிகள், ஓசியானேரியம் / மீன்வளம், கோல்ஃப் மைதானம், தோட்டம் / பண்ணை சுற்றுலா திட்டங்கள், அருங்காட்சியகங்கள், சாகச சுற்றுலா திட்டம், குரூஸ் சுற்றுலா
திட்டம் மற்றும் கேரவன் சுற்றுலா திட்டம் ஆகிய 13 தகுதியான சுற்றுலாத்
திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com