15 நாள்களில் 500 சாலைகள்: சாதிக்குமா சென்னை மாநகராட்சி?

வடகிழக்குப் பருவமழைத் தொடங்குவதற்குள், சென்னையில் குண்டும் குழியுமாக இருக்கும் 500 சாலைகளை, அக்டோபர் 10ஆம் தேதிக்குள் சீரமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
15 நாள்களில் 500 சாலைகள்: சாதிக்குமா சென்னை மாநகராட்சி?


சென்னை: வடகிழக்குப் பருவமழைத் தொடங்குவதற்குள், சென்னையில் குண்டும் குழியுமாக இருக்கும் 500 சாலைகளை, அக்டோபர் 10ஆம் தேதிக்குள் சீரமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

சென்னை மற்றும் சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் குண்டும் குழியுமாக, மரணக் குழிகளாகக் காத்திருக்கும் சாலைகள், பருவமழைக் காலத்தில் வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவாலாக மாறிவிடும்.

எனவே, பருவமழைத் தொடங்குவதற்குள் 500 சாலைகளை போட்டு முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், மனப்பாக்கம், முகலிவாக்கம், ராமாபுரம், போரூர், மடிப்பாக்கம் போன்ற, குண்டும் குழியுமான சாலைகளுக்கு பெயர் போன பகுதிகளுக்கு நல்ல காலம் பிறக்கலாம் என்று மக்கள் கருதுகிறார்கள்.

செப்டம்பர் 20ஆம் தேதி வரை 100 சாலைகளில் தார் போட்டு சீரமைத்திருப்பதாகவும், நள்ளிரவில் மழை பெய்வதால், சாலைகள் போடும் பணிகளில் சவால் நிறைந்ததாக இருப்பதாக பணியில் ஈடுபட்டுள்ள பொறியாளர்கள் கூறுகிறார்கள்.

காலையிலும் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக, தார்களை உருக்கும் பணிகளை மேற்கொள்ள முடியாமல், இரவிலும், கனமழை கொட்டுவதால், சாலை போடும் பணிகளை விரைந்து முடிக்க முடியாமல், பணிக்குழுவினர் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

எனவே, தற்போது சாலைகளில் போக்குவரத்தை மாற்றிவிட்டு, பகல் நேரத்திலேயே 500 சாலைகளையும் சீரமைக்க இக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

முதலில், ஒரு சாலையில் தார் போட்டு மேம்படுத்த வேண்டும் என்றால், மாதக்கணக்கில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை காவல்துறை உதவியோடு அப்புறப்படுத்த வேண்டும். போக்குவரத்தை மாற்றியமைக்க வேண்டியதும் அவசியமாகிறது. இதுபோல பல சவால்களுக்கு இடையே நாள் ஒன்றுக்கு 20 கிலோ மீட்டர் தொலைவுக்கு இவர்கள் சாலை போட்டு வருகிறார்கள். கூடுதலாக பல நல்ல சாலைகளில் இருக்கும் குழிகளை மூடும் பணிகளும் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்கிறது.

கடந்த சில நாள்களாக, வளசரவாக்கம், போரூர் பகுதிகளில் சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன.

பழைய சாலைகளைத் தோண்டி, புதிய சாலைகள் அமைப்பதற்கு என்று வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளன. அதுபோல, எந்தெந்த சாலைகளை புதுப்பிக்க வேண்டும் என்பதற்கான கையேடுகளும் உள்ளன. அவற்றின் அடிப்படையில் இப்பணிகள் நடைபெறுகிறதா என்பதில் மக்கள் சந்தேகம் எழுப்புகிறார்கள்.

ஒரு பக்கம், பழுதடைந்திருக்கும் சாலைகள் பற்றி பொதுமக்கள் நாள்தோறும் புகார்களை எழுப்பி வரும் நிலையில், புதிதாக போடப்படும் சாலைகளை தரமாகவும், அதற்கான அடிப்படை விஷயங்களைக் கையாண்டு போடவும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தரமான சாலைகள் போடப்படாமல், போட வேண்டும் என்ற கடமைக்காகப் போடப்படும் சாலைகள், அடுத்த நாள் பெய்யும் மழையிலேயே காணாமல் போகும் அபாயம் இருப்பதையும் கருத்தில் கொண்டு, அரசுக்கு நல்ல பெயர் வாங்கித் தர வேண்டும் என்ற எண்ணத்தோடு சாலை போட்டால் நல்லது என்றும் கருத்துத் தெரிவித்துள்ளனர் பொதுமக்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com