விறுவிறுப்படைந்த நாகை தேர்தல் களம்

விறுவிறுப்படைந்த நாகை தேர்தல் களம்

தமிழக மக்களவைத் தேர்தலில் குறைந்த அளவு வேட்பாளர்களே களம் காணும் தொகுதி நாகை (தனி) . இங்கு 9 பேர் மட்டுமே போட்டியில் உள்ளனர்.

நாகப்பட்டினம் (தனி) தொகுதி: நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின் 39 தொகுதிகளில் 29-ஆவது தொகுதியாகவும், பட்டியலின வேட்பாளர் போட்டியிடும் தனித் தொகுதியாகவும் உள்ளது. இதில் நாகை மாவட்டத்தில் உள்ள நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளும், திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், நன்னிலம், திருத்துறைப்பூண்டி ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளும் அடங்கும்.

களம் காணும் வேட்பாளர்கள்: நாகை தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை.செல்வராஜ், அதிமுக சார்பில் சுர்சித் சங்கர், பாஜக சார்பில் எஸ்.ஜி.எம்.ரமேஷ் கோவிந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் எம்.கார்த்திகா உள்பட 9 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இதுவரை தேர்தல்களில்...கடந்த காலங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 7 முறையும், காங்கிரஸ் 4 முறையும், திமுக 4 முறையும், அதிமுக 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

மதநல்லிணக்க பூமி: துறைமுக நகரமான நாகை மாவட்டம் நாகூர் தர்கா, வேளாங்கண்ணி பேராலயம் , சிக்கல் சிங்காரவேலவர் ஆலயம் என மத நல்லிணக்க பூமியாக விளங்குகிறது. முதலாம் குலோத்துங்கச் சோழன், ராஜேந்திர சோழன் என சோழர்களின் வாழ்வியலை நிலைநிறுத்தும் தொன்மையான பகுதியாக திருவாரூர் மாவட்டம் விளங்குகிறது.

முக்கிய தொழில்: நாகை மாவட்டத்தில் மீன்பிடித் தொழிலும், விவசாயமும், திருவாரூர் மாவட்டத்தில் விவசாயமும் பிரதான தொழில்களாக உள்ளன. ஏழை, அடித்தட்டு மக்கள், கூலித் தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள் அதிகமுள்ள தொகுதியாகும். கடந்த 1990-ஆம் ஆண்டு வரை நாகை துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி நடைபெற்றுள்ளது. நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பயன் அடைந்தனர். ஆண்டுக்கு ஒரு லட்சம் டன் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. பின்னர் சென்னை உள்ளிட்ட பல்வேறு துறைமுகங்கள் கன்டெய்னர் கையாளும் வகையில் மேம்படுத்தப்பட்டதால், நாகை துறைமுகத்தின் செயல்பாடு 1990-களுக்கு பிறகு முற்றிலும் தடைபட்டது.

முக்கிய கோரிக்கைகள்: டெல்டாவின் கடைமடை மாவட்டங்களாக திருவாரூர், நாகை உள்ளன. இம்மாவட்டங்களில் அதிக அளவில் நெல் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் அதற்கான உரிய ஆதரவு விலை கிடைக்க வேண்டும், பருத்தி கொள்முதலை மத்திய, மாநில அரசுகளே செய்ய வேண்டும் என்பதும் விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

நாகை மாவட்டத்தில் 27 மீனவக் கிராமங்கள் உள்ளன. லட்சக்கணக்கான மீனவர்கள் மீன்பிடி தொழில் மற்றும் அதைச் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை கடற்படை மற்றும் கொள்ளையர்களால் மீனவர்கள் தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது, படகுகள் பறிமுதல் செய்யப்படுவது போன்ற பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு தேவை, தங்கு தடையின்றி மீன்பிடி தொழில் செய்வதற்கு ஏதுவாக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மீனவர்களின் கோரிக்கை.

நாகை மாவட்டத்தில் இருந்து நேரடியாக வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் மீன்களைப் பதப்படுத்தி குளிர்விக்கும் நிலையங்களை அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர்.

இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் வை. செல்வராஜ்: மன்னார்குடி ஊராட்சி ஒன்றியம் சவளக்காரன் பகுதியைச் சேர்ந்த இவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டச் செயலர், மாணவர் மன்றம், இளைஞர் மன்றம், மன்னார்குடி ஒன்றிய செயலாளராக 14 ஆண்டுகள், மாவட்ட ஊராட்சி உறுப்பினராக 3 முறை, திருவாரூர் மாவட்ட ஊராட்சித் தலைவராக ஒரு முறையும் இருந்துள்ளார். தற்போது கட்சியில் இரண்டாவது முறையாக மாவட்ட செயலராக செயல்பட்டு வருகிறார்.

அதிமுக வேட்பாளர் சுர்சித் சங்கர்: நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள தலைஞாயிறு பகுதியை சேர்ந்த இவர், இளநிலை தொழிலாளர் மேலாண்மை, முதுநிலை சமூக சேவை, எல்.எல்.பி. மற்றும் ஆராய்ச்சி படிப்பு பயின்றவர். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு காங்கிரஸில் இணைந்த சுர்சித் சங்கருக்கு மாநில விவசாய அணி செயலர் பதவி வழங்கப்பட்டது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, அதிமுவில் இணைந்தார். தற்போது அவருக்கு, முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் பரிந்துரையின்பேரில், போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பாஜக வேட்பாளர் எஸ்ஜிஎம். ரமேஷ் கோவிந்த்: திருவாரூர் மாவட்டம் சித்தமல்லி பகுதியைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.ஜி. முருகையனின் மகன் ஆவார். அதிமுக உறுப்பினராக இருந்த ரமேஷ் கோவிந்த்,

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அக்கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்தார். பாஜக விவசாய அணியின் மாநில துணைத் தலைவராக உள்ள இவர், பிரதமர் நரேந்திர மோடி அரசின் 10 ஆண்டு கால சாதனைகளை கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு. கார்த்திகா: கோவையைச் சேர்ந்த பொறியாளர் மு.கார்த்திகா தொகுதியில் உள்ள பிரச்னைகளை அறிந்து, அதனை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக கூறி தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இவர்களைத் தவிர பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஜெகதீஷ், மக்கள் தேசிய சக்தி கட்சியின் பூமிநாதன், சுயேச்சைகள் 3 பேர் ஆகியோரும் களத்தில் உள்ளனர்.

நாகை தொகுதி வாக்காளர்கள்

ஆண்கள் 6,57,857

பெண்கள் 6,87,181

மூன்றாம் பாலினத்தவர் 82

மொத்தம் 13,45,120 வாக்காளர்கள்

2019 தேர்தல் முடிவுகள்

வாக்குரிமை பெற்ற வாக்காளர்கள் 13,03,649

செல்லத்தக்க பதிவான வாக்குகள் 10,02,920

எம். செல்வராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 5,22,892

எம். சரவணன், அதிமுக 3,11,539

செங்கொடி, சுயேச்சை 70,307

வெற்றி வித்தியாசம் 2,11,353

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com