நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுத்திடுக! தேர்தல் அதிகாரியிடம் மார்க்சிஸ்ட் கம்யூ. வலியுறுத்தல்

நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுத்திடுக! தேர்தல் அதிகாரியிடம் மார்க்சிஸ்ட் கம்யூ. வலியுறுத்தல்
Published on
Updated on
1 min read

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடித்தை மாநிலக்குழு உறுப்பினர்கள் வெ. ராஜசேகரன், ஜி. செல்வா ஆகியோர் தலைமை தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து அளித்துள்ளனர். அக்கடிதத்தில், திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக அவரது ஊழியர்கள் - உறவினர்கள் தேர்தல் விதிமுறைகளை மீறி, சட்டத்திற்கு புறம்பாக வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதற்காக சுமார் ரூபாய் 4.5 கோடி பணத்தை நேற்று (06.04.2024) நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் எடுத்துச் சென்றுள்ளனர். தேர்தல் அதிகாரிகள் தாம்பரம் ரயில் நிலையத்தில் சோதனையிட்டு பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். பிடிபட்ட மூன்று நபர்கள் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டலில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் நெருங்கிய உறவினர் எனவும் அப்பணத்தை திருநெல்வேலியில் போட்டியிடும் நயினார் நாகேந்திரனிடம் கொடுப்பதற்காக எடுத்துச் சென்றோம் என கூறியுள்ளனர். இது தேர்தல் விதிமுறைகளுக்கு முரணானது மட்டுமின்றி, சட்டத்திற்கு புறம்பான செயலாகும்.

தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் தேர்தல் விதிமுறைகளை கடைபிடிக்காமலும், சட்டத்திற்கு புறம்பாகவும் செயல்படுவதாக பல இடங்களில் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. உதாரணமாக, ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்ட போது பாஜக வேட்பாளர் ஏ.பி. முருகானந்தம் தேர்தல் அதிகாரிகளை மிரட்டியதுடன் தரக்குறைவாக பேசியுள்ளார். இச்சம்பவத்தில் மாவட்ட ஆட்சியர் புகார் அளித்து அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பாஜக வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக அண்டை மாநிலங்களிலிருந்து கோடிக்கணக்கில் பணப்பரிமாற்றம் நடைபெறுவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.

எனவே, நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும், அவருடன் நெருக்கமாக உள்ள உறவினர்கள், கட்சி நிர்வாகிகள் அனைவரின் வீடுகளிலும் சோதனையிட வேண்டும். நயினார் நாகேந்திரன் மீது உரிய சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், இதேபோன்று பாஜக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் பண முறைகேடுகள் நடைபெறா வண்ணம் உரிய தலையீடு செய்வதுடன், ஜனநாயகப் பூர்வமான முறையில் தேர்தல் நடத்துவதை உறுதி செய்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com