வள்ளலார் சர்வதேச மையத்திற்கு எதிர்ப்பு: கட்டுமான பள்ளத்தில் இறங்கி மக்கள் போராட்டம்

வள்ளலார் சர்வதேச மையத்திற்கு எதிர்ப்பு: கட்டுமான பள்ளத்தில் இறங்கி மக்கள் போராட்டம்

வடலூர் வள்ளலார் தெய்வ நிலைய பெருவெளியில் சர்வதேச மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பார்வதிபுரம் கிராம மக்கள் கட்டுமானத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வாடிய பயிர்களை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க சுவாமிகள் அமைத்த வள்ளலார் தெய்வ நிலையம் கடலூர் மாவட்டம், வடலூரில் அமைந்துள்ளது. இங்கு தைப்பூசம் ஜோதி தரிசனம் விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இதில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மற்றும் சன்மார்க்க அன்பர்கள் கலந்து கொண்டு ஜோதி தரிசனம் கண்டு வணங்குவர். இதேபோல் ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திரத்தன்று ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும்.

கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் இப்பொழுது திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தது.

அதன்படி வடலூர் வள்ளலார் தெய்வ நிலைய பெருவெளியில் ஞானசபை அருகே ரூ.100 கோடி மதிப்பில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.

வள்ளலார் தெய்வநிலைய பெருவெளியில் சர்வதேச மையம் அமைப்பதற்கு அரசியல் கட்சியினர் சன்மார்க்க நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த எதிர்ப்புகளை மீறி தமிழக அரசு கட்டுமான பணியை தொடங்கியுள்ளது.

இந்நிலையில் ஞானசபை அருகே கட்டுமான பணிக்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் பார்வதிபுரம் கிராமத்தைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சர்வதேச மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளத்தில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு 19-ஆம் தேதி நடைபெற்று வரும் நிலையில். தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி பிரமுகர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com