கேள்விக்குறியாகும் மூன்றாம் தலைமுறைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர் வாழ்வாதாரம்! கைவிட்ட அரசு, அரசியல்வாதிகள், நிர்வாகம்!!

தொழிலாளர் வாழ்வாதாரம் அதிர்ச்சியில்: மாஞ்சோலை எதிர்காலம் கேள்விக்குறி!
மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள்
மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள்

அம்பாசமுத்திரம்: ஊரே மக்களவைத் தேர்தல் கோலாகலத்தில் இருக்க, உறுதியில்லா எதிர்காலம் பற்றிய அச்சத்தில் உழன்று கொண்டிருக்கிறார்கள் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள்!

தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம் மட்டுமே ஐந்து வகை நிலங்களையும் கொண்ட மாவட்டமாகும். மேற்குத் தொடர்ச்சி மலை, பொதிகை மலை, தாமிரவருணி என இயற்கை வளங்கள் நிறைந்துகிடக்கும் இயற்கை பொக்கிஷம். மேற்குத் தொடர்ச்சி மலை உலகிலேயே அதிக அளவில் ஆயிரக்கணக்கான மூலிகைகள் நிறைந்த வனப்பகுதியாக விளங்குகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்த சிங்கம்பட்டி ஜமீனுக்குச் சொந்தமான 8,374 ஏக்கர் மலைப் பகுதியை பாம்பே பர்மா ட்ரேடிங் கார்பரேஷன் (பி.பி.டி.சி.) என்ற நிறுவனத்துக்கு 1929ஆம் வருடம் 99 வருடக் குத்தகைக்கு சிங்கம்பட்டி ஜமீன்தார் கொடுத்தார்.

இதில் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தின் பகுதிகளாக இருந்த ராஜபாளையம், சிவகிரி, சங்கரன்கோயில், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்டப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களைக் கொண்டு தேயிலைத் தோட்டம் அமைத்து நிர்வகித்து வந்தனர்.

1948 ஆம் வருடம் ஜமீன்தாரி முறை ஒழிப்புச் சட்டம் வந்தபோது சிங்கம்பட்டி ஜமீனுக்குச் சொந்தமாக இருந்த மலைப் பகுதிகளிலிருந்து 23,000 ஹெக்டேர் நிலத்தை அரசு தன் வசம் எடுத்துக் கொண்ட நிலையில் அரசின் அனுமதி பெற்று பி.பி.டி.சி. நிறுவனம் குத்தகையைத் தொடர்ந்தது.

இந்த நிலையில், 1988ஆம் ஆண்டு இந்த வனப்பகுதியைச் சோ்த்து 895 சதுர கி.மீ. பகுதியில் களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பகமாக வனத்துறையால் அறிவிக்கப்பட்டு 2018ஆம் ஆண்டு காப்புக் காடாகவும் அறிவிக்கப்பட்டது.

களக்காடு-முண்டந்துறை வனப்பகுதிக்குள் பி.பி.டி.சி மட்டும் அல்லாமல் தனியார் மற்றும் ஆதீனத்துக்குச் சொந்தமான 30 இடங்கள் இருக்கின்றன. அவை அனைத்துமே புலிகள் காப்பகத்துடன் இணைக்கப்பட்டன.

இதையடுத்து, தேயிலைத் தோட்டப் பகுதியை ஒப்படைக்க பிபிடிசி நிறுவனத்தை வனத்துறை வலியுறுத்தியது. இதுகுறித்து அந்த நிறுவனம் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் வனத்துறைக்கு சாதகமாக தீா்ப்பு வழங்கப்பட்டது.

இதையடுத்து, வனப்பகுதியை விட்டு 2028ஆம் ஆண்டுக்கு முன் வெளியேற வலியுறுத்தியதோடு, வெளியேறும் முன் தேயிலைத் தோட்டங்கள் இருந்த இடங்களை காடுகளாக்கித் தர வேண்டும் என்றும் பிபிடிசி நிறுவனத்துக்கு நிபந்தனை விதித்தது.

இந்த நிலையில் அரசு மற்றும் தோட்ட நிர்வாகம் மட்டுமின்றி நீதிமன்றமும் வனத்தைத் திரும்பப் பெறுவதில் மட்டுமே கவனம் செலுத்தின.

ஆனால், தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை நீதிமன்றங்களும் அரசும் நிர்வாகமும் கருத்தில் கொள்ளவில்லை. இதனால் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்படும் என்று கூறிவந்தனர்.

தற்போது, அதிகாரப்பூர்வ அறிவிப்பில்லாமல் பி.பி.டி.சி. நிர்வாகம் தோட்டத் தொழிலாளர்களிடம் பணியில் தொடர விரும்பினால் வால்ப்பாறையில் உள்ள பி.பி.டி.சி. நிர்வாகத்திற்குச் சொந்தமான தேயிலைத் தோட்டத்தில் பணியைத் தொடரலாம். விருப்பமில்லாதவர்கள் விருப்ப ஓய்வு பெறலாம் என்று கூறிவருவதாகத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சுமார் 100 ஆண்டுகளாகப் பிறந்த ஊர், மண், உற்றார் உறவினர்களை மறந்து தேயிலைத் தோட்டத்தை உருவாக்குவதிலும், தேயிலைத் தோட்டத்தைப் பராமரிப்பதிலும் 4 தலைமுறை காலமாக இந்த வனப்பகுதியில் கழித்த அந்த மக்கள், தங்களின் வாழ்வாதாரத்தை நினைத்துத் தற்போது பெரும் அச்சத்தில் உள்ளனர்.

இதுகுறித்துத் தோட்டத் தொழிலாளர்கள் கூறும்போது, தேயிலைத் தோட்ட நிர்வாகம் பணியாளர்களிடம் வேறு இடத்திற்கு பணிக்குச் செல்லவோ, விருப்ப ஓய்வு பெறவோ வலியுறுத்தி வருகிறது. மூன்று தலைமுறையாக இந்தக் காட்டில் மலைவாசிகளைப் போல் வாழ்ந்து வருகிறோம். நான்காவது தலைமுறைக் குழந்தைகள் இங்கு பிறந்து படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த இடத்தை விட்டு வெளியேறும் நிலை உருவானால் எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும்.

எங்களுக்கு வேறு தொழில் தெரியாது. எங்களுக்கு வேறு நிலமோ, வீடோ கிடையாது. இங்கிருந்து வெளியேறினால் நிரந்தர முகவரி இல்லாமல் ஆதார், குடும்ப அட்டை உள்ளிட்டவற்றில் முகவரி மாற்றம் செய்வதும் கேள்விக்குறியாகும். எனவே அரசு இங்குள்ள தொழிலாளர்களுக்கு இலவச வீடு, நிதியுதவி வழங்குவதோடு, எங்கள் குழந்தைகளுக்கு அவர்களின் படிப்பிற்கேற்ப அரசுப் பணியும் வழங்க வேண்டும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மூன்றாம் தலைமுறைத் தொழிலாளர்கள்

மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் மூன்றாம் தலைமுறைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. தற்போது 40 முதல் 50 வரை வயதுள்ள மூன்றாம் தலைமுறைப் பணியாளர்கள் பணியிலிருந்து வெளியேறினால் வேறு நிறுவனங்களில் பணிக்கு சேர்வது என்பது இயலாத ஒன்றாகும்.

இந்த வயதில் எந்த ஒரு நிறுவனமும் புதிதாக யாரையும் பணியில் சேர்த்துக் கொள்ளாது. மேலும் மூன்றாம் தலைமுறைத் தொழிலாளர்களின் குழந்தைகள் பள்ளிகளில் படித்து வரும் நிலையில் பணியிலிருந்து வெளியேற்றப்பட்டால் குழந்தைகளின் படிப்பும் கேள்விக்குறியாகும்.

மேலும், நிர்வாகத்தினர் தருவதாகக் கூறும் நிவாரணத் தொகை, 30 ஆண்டுகள் பணிபுரிந்தவர்களுக்கு ஒருவிதமாகவும், 10 முதல் 15 ஆண்டுகள் பணிபுரிந்தவர்களுக்கு ஒருவிதமாகவும் உள்ளது. இதனால் மூன்றாம் தலைமுறையினருக்கு வழங்கும் நிவாரணத் தொகை அவர்களது வாழ்வாதாரத்தைத் தொடரப் போதுமானதாக இருக்காது.

இரண்டாம் தலைமுறைத் தொழிலாளர்கள் தங்கள் முழுப் பணிக் காலத்தை நிறைவு செய்து முழுப் பணப் பலன்களைப் பெறுவர். இந்நிலையில் 10 முதல் 15 ஆண்டுகள் மட்டுமே பணியில் இருக்கும் மூன்றாம் தலைமுறை தொழிலாளர்களில் பலர் நிரந்தரமாக்கப்படாத நிலையில் அவர்களுக்கு வழங்கப்படும் பணப்பலன் ஒரு லட்சத்திற்கும் குறைவாக மட்டுமே கிடைக்கும் நிலை உள்ளது. இது மூன்றாம் தலைமுறையினர் பணியிலிருந்து வெளியேற்றப்படும் நிலையில் இந்தப் பணப்பலன் முழுமையாக பலன் தராது. மேலும் இருப்பிடமும் இல்லாமல், மாற்றுப் பணியும் இல்லாமல் மூன்றாம் தலைமுறைத் தொழிலாளர்களின் குழந்தைகளின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகும் நிலையே உள்ளது.

இதுகுறித்து தோட்ட நிர்வாகமோ, அரசோ, அரசியல்வாதிகளோ எந்த ஒரு அக்கறையும் எடுத்துக்கொள்ளவில்லை. சொந்த ஊர், நிலங்களை விட்டு வந்து 100 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சொந்த ஊருக்குச் சென்றால் அங்கு ஒரு பிடி மண்கூட சொந்தமில்லாமல் அங்கும் வாழ்க்கையைத் தொடர முடியாது. எனவே மூன்றாம் தலைமுறைத் தொழிலாளர்கள் பிறந்த மண்ணிலேயே அகதிகளாகும் நிலைதான் உருவாகும் என்று தங்கள் வாழ்க்கை மற்றும் தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

ஜமீன்தாரி முறை ஒழிப்புச் சட்டம் கொண்டு வந்தபோது ஜமீனுக்கு சொந்தமான சொத்துகள் அரசால் எடுத்துக் கொள்ளப்பட்டன. மேலும், ஜமீனில் இயங்கி வந்த வருவாய்த் துறை, வனத் துறை, தேவஸ்தானம், பொதுப்பணித் துறை மற்றும் வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட துறைகளில் பணிபுரிந்த ஊழியர்கள் அரசால் எடுத்துக் கொள்ளப்பட்டனர். அதுபோல் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகாமல் இருக்க மாற்றுப் பணியோ, உரிய நிவாரணமோ கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

கடந்த பேரவைத் தொகுதித் தேர்தலின்போதும், தற்போது நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கும் எந்த ஒரு வேட்பாளரும் தொழிலாளர்களிடம் நேரில் வந்து வாக்கு சேகரிக்காதது தொழிலாளர்களிடையே தாங்கள் அனைத்துத் தரப்பினராலும் ஒதுக்கி வாழ்வாதாரம் இழந்த நிலையில் உள்ளதாக குரல் உடைந்து தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் பி.பி.டி.சி. நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் ஆரம்பத்தில் முழுப் பணப்பலன்கள் வழங்குவதாகக் கூறி வந்த நிலையில் தற்போது, முழுப் பணிபுரிந்தவர்களுக்கு ஒரு விகிதத்திலும், 10 முதல் 15 ஆண்டுகள் பணிபுரிந்தவர்களுக்கு ஒரு விகிதத்திலும், பணி நிரந்தரமாகாதவர்களுக்கு ஒரு விகிதத்திலும் பணப்பலன்கள் தருவதாகக் கூறிவருகிறது.

இது தொழிலாளர்களிடையே பெரும் அச்சத்தையும் கலக்கத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

தொழிலாளர்கள் எழுப்பும் கேள்விகள்

- நான்கு தலைமுறைகளாக வாழ்ந்த இடத்தை விட்டு மாற்று இடத்திற்கு குடும்பத்தோடு இடம் பெயர்வது சாத்தியமாகுமா?

- ஆண்டு ரூ. 750 தொழில்வரியாக செலுத்தி வந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்போது அரசு எடுக்கப் போகும் நடவடிக்கை என்ன?

- 40 – 50 வயது நிலையில் இருக்கும் தேயிலைத் தொழில் மட்டுமே தெரிந்த, பிற தொழில் எதுவும் தெரியாத தொழிலாளர்களைப் பிற நிறுவனங்கள் பணியில் சேர்த்துக் கொள்ளுமா?

- மாஞ்சோலையை விட்டு வெளியேறும் நிலையில் வேறு இருப்பிட ஆதாரம் இல்லாமல் ஆதார், குடும்ப அட்டை உள்ளிட்ட அடையாள அட்டைகளில் முகவரி மாற்றம் செய்வது எப்படி?

தொழிலாளர்களின் எதிர்பார்ப்பு

- தோட்டத் தொழிலாளர்கள் அனைவருக்கும் முழுமையான பணப் பலன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- வெளியேற்றப்படும் தொழிலாளர்களுக்குக் குடியிருக்க அரசு இலவச வீடு, வீட்டு மனை வழங்க வேண்டும்.

- மாஞ்சோலைத் தோட்டங்களில் உள்ள பள்ளிகளில் பயிலும் தொழிலாளர்களின் குழந்தைகள் படிப்பைத் தொடர அரசு உரிய வசதிகள் செய்து தர வேண்டும்

- தோட்டங்கள் அழிக்கப்பட்டு சூழல் வனமாக மாற்றப்பட்டு சூழல் வனத் துறை சுற்றுலா கொண்டு வரும் நிலையில் வாய்ப்புள்ள தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தர வேண்டும்.

- நூறு ஆண்டுகளாக வனப்பகுதியில் வசித்து வனத்தை முழுமையாக உணர்ந்து சூழலைப் பாதுகாக்கும் முறையறிந்த தொழிலாளர்களை வனத் துறை தங்கள் பணிகளில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

பல்வேறு இடர்களைக் கண்டு இன்னல்களை ஏற்று நூறாண்டுகளாக வசித்த மண்ணின் மைந்தர்களை மனிதர்களாக மதித்து அவர்களுக்கு உரிய பணப்பலன்கள், மாற்றுப் பணிகள் வழங்க வைப்பதும், வழங்குவதும் அரசின் கடமையாகும்.

அரசு இந்த நிலையிலிருந்து தவறாது என்பது தொழிலாளர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனிடையே தங்களின் எதிர்காலம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தை எண்ணி பல தொழிலாளர்கள் மனதளவில் பாதிக்கப்படுவதால் உடல் நிலை பாதிப்பிற்கும் உள்ளாகி வருகின்றனர்.

தொழிலாளர்களைப் பாதிக்காத, அவர்களின் எதிர்காலத்தை உறுதி செய்யும் திடமான நடவடிக்கையை எதிர்நோக்கியுள்ளனர் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com