ஜிஎஸ்டி வரி ரத்து செய்யப்படும் -விசிக தேர்தல் அறிக்கை வெளியீடு

ஜிஎஸ்டி வரி ரத்து செய்யப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில் இடம் பிடித்துள்ளன.
ஜிஎஸ்டி வரி ரத்து செய்யப்படும் -விசிக தேர்தல் அறிக்கை வெளியீடு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அக்கட்சியின் மக்களவை தேர்தல் அறிக்கையை இன்று(ஏப். 9) வெளியிட்டார். சிதம்பரம் அருகே உள்ள அக்கரை ஜெயங்கொண்டப்பட்டினத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தேர்தல் அறிக்கையை தொல்.திருமாவளவன் வெளியிட்டு, தனது தேர்தல் பிரசாரத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அக்கரை ஜெயங்கொண்டப்பட்டினத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முன்னதாக அங்குள்ள எல்லையம்மன் கோயில் திருமாவளவன், அமைச்சர் எம்.ஆர்கே.பன்னீர்செல்வம் ஆகியோர் வழிபட்டனர். ’பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தேர்தல் அறிக்கையும், நாடாளுமன்றத்தில் திருமா’ என்ற நூலையும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் மக்களவைத் தொகுதி வேட்பாளருமான தொல்.திருமாவளவன் வெளியிட்டார்.

முதல் பிரதியை, திமுக மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டு வாழ்த்துரையாற்றினார்.

அம்பேத்கர் பிறந்தநாளை ’அறிவுத் திருநாளாக’ அங்கீகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ முறையை அமல்படுத்த விடமட்டோம், அதை எதிர்ப்போம், ஆளுநரை பல்கலைக்கழக வேந்தராக நியமிக்கக் கூடாது, ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையையே ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட அம்சங்கள் இந்த தேர்தல் அறிக்கையில் முக்கிய இடம் பிடித்துள்ளன.

வகுப்புவாதப் பிரிவினையைத் தூண்டும் சட்ட திருத்தங்கள் நீக்கப்பட வேண்டும், தேர்தல் ஆணையர் நியமனச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பட்டியலின - பழங்குடியின மக்களுக்கு தனி வங்கி அமைக்க வேண்டும், உயர் சாதிப் பிரிவினருக்கான இட ஒதுக்கீடு ரத்து, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் வழக்காடு மொழியாகத் ’தமிழ் மொழியை’ அறிவிக்க வேண்டும், அகில இந்திய அளவில் விவசாயத்திற்கு தனி பட்ஜெட் உள்ளிட்ட வாக்குறுதிகள் விசிக தேர்தல் அறிக்கையில் முக்கிய இடம் பிடித்துள்ளன.

இந்நிகழ்ச்சியில் தொல்.திருமாவளவன் பேசியது: பாசிச பாஜக அரசு வீழ்த்தப்பட வேண்டும். அதற்காக இந்தியா கூட்டணியை மு.க.ஸ்டாலின் வியூகம் அமைத்து உருவாக்கியிருக்கிறார். 2 ஆண்டுகளாக அவர் எடுத்த பெருமுயற்சியின் விளைவாக, ராகுல்காந்தியுடன் இணைந்து அகில இந்திய அளவில் பாஜக எதிர்ப்பு சக்திகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான முதல் புள்ளியை தொட்டு தொடங்கி வைத்தவர் முதல்வர் ஸ்டாலின்.

அவர் தமிழ்நாட்டளவில் தேர்தல் எல்லையை சுருக்கிக் கொள்ளாமலும், அதிமுகதான் எதிரி, எடப்பாடி பழனிசாமிதான் நமது அரசியல் பகைவர் என்று கருதாமல், அகில இந்திய அளவில் அனைத்து மக்களையும் பாதுகாக்க வேண்டும். ஜனநாயகத்தை காக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வோடு தேர்தல் இந்தியா அளவிற்கு விரிவாக்கியவர் ஸ்டாலின்.

1977ல் நாட்டுக்கு நெருக்கடி ஏற்பட்ட போது கருணாநிதி இந்திய அளவில் ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டோரா, அதே போல் இன்று நாட்டுக்கு நெருக்கடி ஏற்பட்ட வேளையில், இந்திய அளவில் அனைத்து ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்க பெருமுயற்சியை மேற்கொண்டவர் ஸ்டாலின்.

பாஜக அரசு தொடருவதா, வேண்டாமா? என்பதுதான் இந்த தேர்தலின் கேள்வி. அதை விடுத்து விட்டு எடப்பாடி பழனிசாமி தமிழர் உரிமையை மீட்போம், தமிழ்நாட்டை காப்போம் என்று திமுக அரசுக்கு எதிராக முழக்கத்தை முன் வைத்திருப்பது. அவர் பாஜகவோடு முரண்படவில்லை, பகைத்துக் கொள்ளவில்லை என்பதை புரிந்து கொள்ளலாம்.

தேர்தல் அறிக்கையில், தேசிய மனித உழைப்பு நேரம் மற்றும் மதிப்புக்கொள்கை. ஒவ்வொரு மனிதனும் எத்தனை மனி நேரம் உழைக்க வேண்டும். அந்த உழைப்பு எத்தனை மனி நேரத்தை கொண்டதாக இருக்க வேண்டும் என்ற உழைப்பு நேர அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும். வாரத்திற்கு 56 மணி நேர உழைப்பிற்கான ஊதியத்தை ஒருவர் பெற்றிருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். அதற்கு குறைவாக இருந்தால், அதற்கான பண இழப்பை அரசு ஈடுகட்ட வேண்டும் என்பதை நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவேன்.

வறுமைக் கோட்டின் உச்சவரம்பை உயர்த்த வேண்டும். தற்போது பாஜக அரசு மாற்றி அறிவித்துள்ளது. கிராமப்புறங்களில் ரூ.32-ம் நகர்புறங்களில் ரூ.47-ம் ஒரு நாளைக்கு ஊதியம் பெற்றால் வறுமை கோட்டின் கீழ் உள்ளவர்கள் என்ற வரையறை நீக்கப்பட வேண்டும். மேலும் அதற்கு பதிலாக கிராமப்புறங்களில் ரூ.200-ம், நகர்புறங்களில் ரூ.220-ம் ஒரு நாளைக்கு ஊதியம் பெற்றால் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்கள் என்று வரையறுக்க்கப்பட வேண்டும்.

நூறு நாள் வேலைத் திட்டத்தில் குறைந்தபட்ச கூலியை நாள் ஒன்றுக்கு ரூ.400 ஆக உயர்த்துவோம். விசிகவை பொறுத்தவரை 200 நாட்கள் வரை வேலை நாட்களாக மாற்ற நடவடிக்கை எடுப்போம். அதனை நகர்புறத்திற்கு விரிவுரிவுப்படுத்துவோம்.

ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் சில மாற்றங்கள் செய்து, ஜிஎஸ்டி 2.0 என்ற முறையில் நாங்கள் புதிய விரி விதிப்பு முறையை கொண்டு வருவோம் என காங்கிரஸ் அறிக்கை கூறுகிறது. அதிலிருந்து சற்று மாறுபட்டு, ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையையே ரத்து செய்ய வேண்டும் என்ற குரல் கொடுப்போம்.

தமிழ்நாட்டில் விவசாயத்திற்கு தனி பட்ஜெட் வழங்கப்படுகிறது. அதுபோல அகில இந்திய அளவில் விவசாயத்திற்கு தனி பட்ஜெட் வழங்க வலியுறுத்துவோம். கிராமங்களில் தோடங்களுடன் வீடு கட்டத் தர வலியுறுத்துவோம். தமிழ்நாடு மாநிலத்திற்கு என்று தனிக்கொடி வலியுறுத்துவோம் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் கருத்தை கொண்டு இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்றார் தொல்.திருமாவளவன்.

மாவட்ட பொருளாளர் எம்ஆர்கேபி.கதிரவன், மூமுக பொதுச்செயலாளர் ஜி.செல்வராஜ், திமுக பொதுக்குழு உறுப்பினர் த.ஜேம்ஸ்விஜயராகவன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் அப்புசந்திரசேகர், இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகேயன், ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரகுமார், சங்கர், விசிக மாவட்டச் செயலாளர் அரங்க.தமிழ்ஒளி, தொகுதி செயலாளர் வ.க.செல்லப்பன், முன்னாள் மாவட்டச் செயலாளர் பால.அறவாழி உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com