90 ஆண்டுகள்.. மேட்டூர் அணையை தூர்வார எவ்வளவு செலவாகும்?

மிகச் சரியாக 90 ஆண்டுகள் கடந்துவிட்டது, மேட்டூர் அணையை தூர்வாரும் நேரம் வந்துவிட்டது!
நீர்மட்டம் சரிந்ததால் குட்டைபோல காட்சியளிக்கும் மேட்டூர் அணை.
நீர்மட்டம் சரிந்ததால் குட்டைபோல காட்சியளிக்கும் மேட்டூர் அணை.

தண்ணீர்பஞ்சம் தலைவிரித்தாடும்போதுதான் நீர்நிலைகளைப் பற்றிய கவலையே மனிதர்களுக்குப் பிறக்கிறது. அதுபோலத்தான், மேட்டூர் அணையில் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துபோயிருக்கும் நிலையில்தான் அதனைப் பற்றி சிந்தனை கூடுகிறது.

தமிழக நீர்வளத் துறை, வரும் மே மாதம் இறுதியில் மேட்டூர் அணையை தூர்வார திட்டமிட்டுள்ளது. ஏனென்றால், கடந்த 1934ஆம் ஆண்டுக்குப் பிறகு மேட்டூர் அணை தூர்வாரப்படவில்லை. சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் 90 ஆண்டுகள்.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 57 அடிக்கும் குறைந்துவிட்டது. ஆனால் அதன் ஒட்டுமொத்த கொள்ளவு 120 அடி. அதிகாரப்பூர்வ தகவல் சொல்வது என்னவென்றால், தமிழக அரசிடமிருந்து உரிய நிதி கிடைத்ததும், உடனடியாக மேட்டூர் அணையை தூர்வாரும் பணிகள் தொடங்கம் என்று. தமிழகத்தில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், தமிழக அரசின் நிதி ஒதுக்கீடுக்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதியும் பெறவேண்டி உள்ளது.

இது குறித்து தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், மேட்டூர் அணை கட்டப்பட்டு 1934ஆம் ஆண்டுக்குப் பிறகு தூர்வாரப்படவேயில்லை. எனவே, இந்த ஆண்டு மேட்டூர் அணையை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகளை வரப்பெற்றுள்ளன.

கடந்த ஆண்டு, நீர் மற்றும் மின்சார ஆலோசனை சேவை மையமும், நீர்வளத்துறையும் இணைந்து, மேட்டூர், அமராவதி, பேச்சிப்பாறை, வைகை அணைகளை தூர்வாருவதற்கான சாத்தியக் கூறுகுள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை தயார் செய்தோம்.

இந்த அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட, அது நிதி ஒதுக்கீடுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேட்டூர் அணையை தூர்வார வேண்டும் என்றால் ரூ.3,000 கோடி தேவைப்படும். இந்தப் பணி 2030ஆம் ஆண்டு நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு அணைகளை ஆய்வு செய்தபோது, தமிழக நீர்வளத்துறைக்கு, மேட்டூர் அணையைத்தான் முதலில் தூர்வார வேண்டும் என்ற முக்கியத்துவம் ஏற்பட்டது. ஏனென்றால், அண்மைக் காலமாக அதன் நீர் கொள்ளளவு வெகுவாகக் குறைந்ததே. தமிழக அரசிடமிருந்து நிதி ஒதுக்கீடு கிடைத்ததும், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று உடனடியாக தூர்வாரும் பணி தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

மேட்டூர் அணையை தூர்வாரும் பணி நிறைவு பெற்றதும் அடுத்த ஆறு ஆண்டுகளில், மேட்டூர் அணையில் கூடுதலாக 30 டிஎம்சி தண்ணீர் தேக்க முடியும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com