யாருக்கு வசமாகும் பட்டு நகரமான ஆரணி தொகுதி?

பட்டு நகரமான ஆரணி தொகுதி யாருக்கு வசமாகும்?
யாருக்கு வசமாகும் பட்டு நகரமான ஆரணி தொகுதி?

ஆரணி மக்களவைத் தொகுதியில் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உள்பட்ட ஆரணி, செய்யாறு, வந்தவாசி (தனி), போளூர் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகள், விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட செஞ்சி, மயிலம் ஆகிய 2 சட்டப்பேரவைத் தொகுதிகள் என 6 தொகுதிகள் உள்ளன.

தொகுதி மறுசீரமைப்பின்போது, வேலூர் மக்களவைத் தொகுதியிலிருந்து, 2008-ஆம் ஆண்டு ஆரணி சட்டப்பேரவைத் தொகுதி பிரிக்கப்பட்டு மக்களவைத் தொகுதியாக உருவாக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கிருஷ்ணசாமி வெற்றி பெற்றார்.

அதன் பிறகு, 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் செஞ்சி வே.ஏழுமலை வெற்றி பெற்றார். 2019-ஆம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட எம்.கே.விஷ்ணுபிரசாத் வெற்றி பெற்றார். இதுவரை காங்கிரஸ் 2 முறையும், அதிமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.

தற்போது திமுக சார்பில் எம்.எஸ்.தரணிவேந்தன, அதிமுக சார்பில் ஜி.வி.கஜேந்திரன், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக சார்பில் அ.கணேஷ்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் பாக்கியலட்சுமி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்தத் தொகுதியைப் பொருத்தவரை திமுக, அதிமுக, பாமக இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது.

தொகுதியில் இந்துக்கள் 70 சதவீதமும், கிறிஸ்தவர்கள், பட்டியலினத்தவர், முஸ்லிம்கள் என 30 சதவீதம் பேரும் உள்ளனர். பெரும்பான்மையாக வன்னியர்கள், முதலியார்கள் உள்ளனர். மேலும் யாதவர், சிறுபான்மையினர் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். இங்கு வெற்றியை நிர்ணயிப்பது வன்னியர்கள், முதலியார்கள் வாக்குகள் ஆகும்.

திமுக வேட்பாளர் எம்.எஸ். தரணிவேந்தன்

தரணிவேந்தன்
தரணிவேந்தன்

திமுக வேட்பாளரான கட்சியின் வடக்கு மாவட்டச் செயலர் எம்.எஸ்.தரணிவேந்தனுக்கு அமைச்சர் எ.வ.வேலு பக்கபலமாக இருந்து வருகிறார். கடந்த முறை திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எம்.கே.விஷ்ணுபிரசாத் தொகுதி பக்கமே வரவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இது திமுகவுக்கு பாதகமாக பார்க்கப்படுகிறது. திமுகவைப் பொருத்தவரை கூட்டணிக் கட்சிகளை பெரிதும் நம்பியுள்ளனர்.

அதிமுகவின் பலம், பலவீனம்

ஜி.வி.கஜேந்திரன்
ஜி.வி.கஜேந்திரன்

அதிமுக வேட்பாளரான ஜி.வி.கஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ சின்னக்குழந்தையின் மருமகன் ஆவார். இவர் கட்சியின் தெற்கு ஆரணி ஒன்றியச் செயலராக உள்ளார். அனைவரையும் ஒருங்கிணைத்து செல்வதில் சிறப்பாக செயலாற்றி வருகிறார். இவருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன், அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி, முக்கூர் என்.சுப்பிரமணியன், அதிமுக மாவட்டச் செயலர்கள் ஜெயசுதா, தூசி கே.மோகன் ஆகியோர் செயலாற்றி வருகின்றனர்.

செஞ்சி, மயிலம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

பாமகவின் பலம்

அ.கணேஷ்குமார்
அ.கணேஷ்குமார்

பாமக வேட்பாளராக செஞ்சி தொகுதி முன்னாள் எம்எல்ஏ அ.கணேஷ்குமார் போட்டியிடுகிறார். கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

மேல்மா சிப்காட் தொழில்பேட்டைக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அதில் ஈடுபட்டு வருவதால் விவசாயிகளின் ஆதரவு இவருக்கு கிடைக்கும் என நம்பப்படுகிறது.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்

கு.பாக்கியலட்சுமி
கு.பாக்கியலட்சுமி

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக திருப்பத்தூரைச் சேர்ந்த கு.பாக்கியலட்சுமி போட்டியிடுகிறார். மருத்துவரான இவர், மக்களை நம்பி போட்டியிடுகிறேன் என்று கூறி வருகிறார். மேலும், சீமானின் முக்கியமான கொள்கை பெண்களுக்கு பாதுகாப்பு என்று கூறி வருகிறார்.

ஆரணி மக்களின் கோரிக்கை பட்டுப் பூங்கா

ஆரணியில் பட்டுப் பூங்கா, நெல் கொள்முதல் நிலையம், ஆரணி வழியாக ரயில் பாதைத் திட்டம், போளூர் தொகுதியில் விதை நெல் ஆராய்ச்சி மையம், சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் விரிவாக்கம், செஞ்சி பகுதியில் நந்தன் கால்வாய்த் திட்டத்தை செயல்படுத்துதல், செஞ்சிக் கோட்டையை சுற்றுலாத் தலமாக்குதல், வந்தவாசியில் கோரைப்பாய் தொழிலுக்கு இலவச மின்சாரம், கோரைப்பாய் நெசவுத் தொழில் பூங்கா, வந்தவாசி பகுதியில் செல்லும் சுக நதியை தூய்மைப்படுத்துதல் ஆகியவை தொகுதி மக்களின் நீண்டகால கோரிக்கைகளாகும்.

வெண்குன்றம் தவளகிரீஸ்வரர் மலையடிவாரத்தில் கிரிவலப்பாதை அமைத்தல், தெள்ளாரில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், வந்தவாசியில் வெளிவட்டச் சாலை, செய்யாற்றில் வேளாண்மைக் கல்லூரி, புவிசார் குறியீடு பெற்ற ஜடேரி நாமக்கட்டி உலகச் சந்தையில் புகழ்பெற அரசு உதவி, மாங்கால் - காஞ்சிபுரம் சாலையை 4 வழிச் சாலையாக மாற்றுதல், செய்யாற்றில் இருந்து நெடுந்தொலைவு பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்படுகின்றன.

ஆரணி தொகுதி வாக்காளர் விவரம்:

ஆண் வாக்காளர்கள் - 7,32, 024 பேர்

பெண் வாக்காளர்கள் - 7,58, 417

மூன்றாம் பாலினத்தவர்: 109

மொத்தம் 14,90,550 வாக்காளர்கள் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com