கச்சத்தீவை மீட்க ஒரே வழி சர்வதேச நீதிமன்றமே! பழ. நெடுமாறன் சிறப்பு பேட்டி

கச்சத்தீவை மீட்க ஒரே வழி சர்வதேச நீதிமன்றமே! பழ. நெடுமாறன் சிறப்பு பேட்டி

ஆர்.முருகன்

91 வயதிலும் தமிழ்த் தேசியத்துக்காகவும், ஈழத் தமிழர்களுக்காகவும் குரல் கொடுத்து அரசியல் களம் கண்டு வருகிறார் பழ. நெடுமாறன். மறைந்த பிரதமர் இந்திரா காந்தியால் என் மகன் எனவும், பெருந்தலைவர் காமராஜரால் மாவீரன் எனவும் அழைக்கப்பட்டவர். தமிழகத்தில் மீண்டும் பேசுபொருளாகியுள்ள கச்சத்தீவு விவகாரம் குறித்து "தினமணி'க்கு அவர் அளித்த சிறப்பு நேர்காணல்.

இந்தியா-இலங்கை கச்சத்தீவு உண்மையில் இப்போது யாருடையது? இதில் உண்மை நிலவரம் என்ன?

ராமேசுவரம், கச்சத்தீவு மற்றும் 13 தீவுகள் தமிழகத்துடன் சேர்ந்திருந்த நிலப்பகுதிகள்தான். 1460-ஆம் ஆண்டு கடல் கொந்தளிப்பு ஏற்பட்டதில் சமுத்திரம் உள்ளே புகுந்து ராமேசுவரம், கச்சத்தீவு உள்ளிட்டவை தீவுகளாக உருமாறின. எனவே, ராமேசுவரம், கச்சத்தீவு ஆகியவை தமிழகத்தில் சேர்ந்திருந்த நிலப்பகுதிகளே என்பதை மறுப்பதற்கில்லை. தமிழகத்துடன் சேர்ந்திருந்த இந்தத் தீவுக் கூட்டங்கள் அனைத்தும் ராமநாதபுரம் ஜமீனுக்கு சொந்தமாக இருந்தன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ராமநாதபுரம் ஜமீன் ஆட்சிக்குள்பட்டதாகவே இருந்த கச்சத்தீவானது குத்தகைக்கும் விடப்பட்டுள்ளது. அப்போதைய ராமநாதபுரம் ராஜா, குத்தகை விட்டதற்கான பத்திரங்கள் இன்னும் உள்ளன. எனவே, கச்சத்தீவு முழுக்க, முழுக்க தமிழகத்தைச் சேர்ந்தது.

அதற்கான ஆவணங்கள் ஏதேனும் ராமநாதபுரம் ஜமீன் வசமோ, மாநில அரசு வசமோ உள்ளனவா?

இந்தியாவிலிருந்து 12 கடல் மைல் தொலைவில் உள்ளது கச்சத்தீவு. இது 285 ஏக்கர் பரப்பளவு கொண்ட சிறிய தீவுதான். இங்கு முத்துக்குளிப்பு, மீன்பிடித் தொழில், சாயம் காய்ச்சுவதற்கான ஒரு வகை வேர்களை சேகரிக்கும் தொழில் உள்ளிட்டவை முன்பு பிரசித்தி பெற்றிருந்தன. இந்தத் தொழில்களுக்காக கச்சத்தீவானது குத்தகைக்கு விடப்பட்டது. அவ்வப்போது பதிவு செய்யப்படும் குத்தகைப் பத்திரங்கள் ராமநாதபுரம் டிவிஷனில் பதியப்பட்டுள்ளன. அரசின் பத்திரப் பதிவு அலுவலகத்தில் உள்ள ஆவணங்களை இன்றும் சரிபார்க்கலாம். மாநில அரசிடம் கேட்டுப் பெற முடியும்.

பின்னர், கச்சத்தீவு விவகாரத்தில் தொடர்ந்து சர்ச்சை எழுவது ஏன்?

1974-இல் அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்திக்கும், இலங்கை பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயகவுக்கும் இடையே ஏற்பட்ட உடன்பாட்டில், இலங்கைக்கு சொந்தமான கச்சத்தீவு என்று குறிப்பிட்டிருந்ததை இந்திய அரசு ஏற்றுக் கொண்டுவிட்டது. நமக்குச் சொந்தமான தீவை இலங்கைக்கு கொடுத்துவிட்டார்கள் என்பதில்லை பிரச்னை. இலங்கைக்கு சொந்தமான கச்சத்தீவு என இந்தியா ஏற்றுக் கொண்டதுதான் பிரச்னை. அதுதான் இன்று வரையில் சர்ச்சையாகத் தொடர்கிறது.

அப்போது மாநில ஆட்சியில் இருந்த திமுக அரசு இதைத் தடுக்கவில்லையா?

இந்திய அரசும், இலங்கை அரசும் செய்துகொண்ட உடன்பாடு அது. மத்தியில் ஆளும் அரசானது அந்நிய நாடுகளுடன் உடன்பாடு செய்யும் பிரச்னையில் மாநில அரசு தனது ஆட்சேபணையைத் தெரிவிக்கலாம். நேரடியாகச் சண்டையிட முடியாது. இருப்பினும், நாடாளுமன்றத்தில் ஃபார்வர்டு பிளாக் கட்சியின் மூக்கையா தேவர், திமுகவைச் சேர்ந்த இரா. செழியன், நாஞ்சில் மனோகரன் ஆகியோர் கேள்விகள் எழுப்பி, கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். பின்னர், தமிழக சட்டப் பேரவையிலும் அனைத்துக் கட்சிகளால் விவாதிக்கப்பட்டு, தங்களது எதிர்ப்புகளை பேரவையில் பதிவு செய்துள்ளனர். அப்போதைய முதல்வர் கருணாநிதியும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததற்கான அதிகாரபூர்வ ஆவணங்கள் உள்ளன.

கச்சத்தீவு விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தற்போது பேசுவது ஏன்?

இந்தியாவில் பிரதமராக நேரு இருந்த காலம் தொடங்கி தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி காலம் வரையிலும் இலங்கையை தாஜா செய்து நமது பக்கம் வைத்துக் கொள்ளும் நடவடிக்கையைத்தான் எடுத்து வந்துள்ளனர். அதற்காக இலங்கை கேட்டது, கேட்காதது என அனைத்தையும் செய்து தருகின்றனர். நரேந்திர மோடி பிரதமராகி

10 ஆண்டுகளாகிறது. ஆனால், இப்போதுதான் பேசுகிறார். இதற்கு முன்னர் பாஜக இருமுறை ஆட்சியில் இருந்தது. அப்போது வாஜ்பாய் பிரதமராக இருந்துள்ளார். அப்போதும் கச்சத்தீவு மீட்புக்கான நடவடிக்கை இல்லை. தேர்தலுக்கு தேர்தல் கச்சத்தீவு குறித்து பேசுவதும், பின்னர் மறந்துவிடுவதும் வாடிக்கையான ஒன்றாக உள்ளது.

கச்சத்தீவை மீட்பதற்கான சட்டபூர்வ வழி ஏதேனும் உள்ளதா?.

கச்சத்தீவை மீட்பதில் பாஜகவுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் உண்மையில் அக்கறை உண்டு என்றால் சர்வதேச நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டும். அதில், நாங்கள் தப்பு செய்துவிட்டோம்; தெரியாமல் கச்சத்தீவை கொடுத்துவிட்டோம்; இப்போது, அதைத் திரும்பப் பெறுகிறோம் என இந்திய அரசு வாதிட வேண்டும். இந்திய அரசுதான் சர்வதேச நீதிமன்றத்துக்கு இந்த விவகாரத்தைக் கொண்டு செல்ல முடியும்; மாநில அரசு ஒன்றும் செய்ய முடியாது.

இதற்கு முன்னால் வேறு ஏதாவது நாடுகள் அதுபோல சர்வதேச நீதிமன்றத்தை நாடியிருக்கின்றனவா?

ஜப்பான்-கொரியாவுக்கு இடையே ஏற்பட்ட கடல் பிரச்னைகளில் சர்வதேச நீதிமன்றத்துக்கு வழக்கு சென்றுள்ளது. இதேபோல, பல்வேறு நாடுகளுக்கு இடையே எழும் கடல் பிரச்னைகளில் சர்வதேச நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை அரசுடன் இந்திய அரசு பேசுவதாலோ, இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வருவதன் மூலமோ கச்சத்தீவை திரும்பப் பெற முடியாது. சர்வதேச நீதிமன்றத்துக்கு செல்வதுதான் இந்தியாவுக்குள்ள ஒரே வழி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com