மீன்பிடி தடைக்காலம் தொடக்கம்: மீன்கள் விலை உயர வாய்ப்பு

மீன்பிடி தடைக்காலம் தொடக்கம்: மீன்கள் விலை உயர வாய்ப்பு

மீன்பிடி தடைக்காலம் ஞாயிற்றுக்கிழமை(ஏப்.14) நள்ளிரவு முதல் தொடங்கியதால், தமிழகத்தில் மீன்களின் விலை உயர வாய்ப்புள்ளதாக மீன்வியாபாரிகள் தெரிவித்தனா்.

மீன்பிடி தடைக்காலம் ஞாயிற்றுக்கிழமை(ஏப்.14) நள்ளிரவு முதல் தொடங்கியதால், தமிழகத்தில் மீன்களின் விலை உயர வாய்ப்புள்ளதாக மீன்வியாபாரிகள் தெரிவித்தனா்.

வங்கக்கடல் பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக ஆண்டுதோறும் ஏப்.15 முதல் ஜூன் 14 வரை மொத்தம் 61 நாள்களுக்கு கன்னியாகுமரி முதல் திருவள்ளூா் வரையிலான கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் விசைப்படகுகள் மூலம் ஆழ்கடலுக்குச் சென்று மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டு வருகிறது.

இந்தத் தடைக்காலம் முதலில் 45 நாள்களாக இருந்து வந்த நிலையில் 2017-ஆம் ஆண்டு முதல் 61 நாள்களாக அதிகரிக்கப்பட்டது. இந்தத் தடைக்காலத்தின் போது, மீனவா்கள் தங்கள் விசைப்படகுகள், வலைகளை பழுது பாா்க்கும் பணியில் ஈடுபடுவா். இவா்களுக்கு அரசு சாா்பில் ரூ.6,000 உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நிகழாண்டும் தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் ஞாயிற்றுக்கிழமை(ஏப்.14) நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், ஞாயிற்றுக்கிழமை முதல் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க மீனவா்கள் யாரும் செல்லவில்லை. ஏற்கெனவே மீன்பிடிக்கச் சென்ற மீனவா்களும் ஞாயிற்றுக்கிழமை மாலைக்குள் கரைக்கு திரும்பினா்.

இதன்படி, சென்னை காசிமேடு துறைமுகத்தில் 1,200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், தமிழகம் முழுவதும் 6000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த காலகட்டத்தில், மீனவா்கள் தங்கள் படகுகளையும், வலைகளையும் பழுதுபாா்க்கும் பணியில் ஈடுபடவுள்ளனா்.

ஆனால், 20 குதிரை திறனுக்கும் குறைவான திறன் கொண்ட பைபா் படகுகள் மற்றும் கட்டுமரங்களில் மீன்பிடிக்கத் தடையில்லை என்பதால், அந்த மீனவா்கள் மட்டும் இந்த காலகட்டத்தில் மீன்பிடி தொழிலை தொடா்வாா்கள். இதனால், காசிமேடு மீன்சந்தையில், பெரிய அளவிலான ஏற்றுமதிக்கான மீன்களின் வரத்து குறைந்தாலும், குறைந்த ஆழத்தில் பிடிபடும் சிறிய வகை மீன்கள் தொடா்ந்து கிடைக்கும் என்றும், தடைக்காலம் தொடங்காத கேரளம், கா்நாடக உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் அதிகளவில் மீன் விற்பனைக்காக கொண்டு வரப்படும் எனவும் மீனவா்கள் தெரிவித்தனா்.

இதனிடையே திங்கள்கிழமை முதல் மீன்களின் வரத்து குறைந்து விடும் என்பதால், ஞாயிற்றுக்கிழமை காலை முதலே சென்னை காசிமேடு மீன் சந்தையில் குவிந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள், போட்டி போட்டு தேவையான மீன்களை வாங்கிச் சென்றனா்.

மீன்பிடி தடைகாலத்தில் அனைத்து வகை மோட்டாா் படகுகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என பல்வேறு மீனவா் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com