நீலகிரி தொகுதி: முன்னாள் அமைச்சரா? இந்நாள் அமைச்சரா?

இப்போதைய மத்திய அமைச்சரும், முன்னாள் மத்திய அமைச்சரும் மோதும் தொகுதி என்பதால் குளிர்ச்சிக்கு பெயர்பெற்ற நீலகிரி மக்களவைத் தொகுதியில் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது.
நீலகிரி தொகுதி: முன்னாள் அமைச்சரா? இந்நாள் அமைச்சரா?
Published on
Updated on
2 min read

நீலகிரி தொகுதியில் உதகை, குன்னூர், கூடலூர் (தனி) மேட்டுப்பாளையம், அவிநாசி, பவானிசாகர் (தனி) ஆகிய ஆறு சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் உதகை, குன்னூர், கூடலூர் ஆகிய மூன்று சட்டப் பேரவைத் தொகுதிகள் நீலகிரி மாவட்டத்தில் உள்ளன. மேட்டுப்பாளையம் தொகுதி கோவை மாவட்டத்திலும், அவிநாசி தொகுதி திருப்பூர் மாவட்டத்திலும், பவானிசாகர் தொகுதி ஈரோடு மாவட்டத்திலும் உள்ளன. இதில் உதகை காங்கிரஸ் வசமும், குன்னூர் திமுக வசமும், மற்ற 4 தொகுதிகளும் அதிமுக வசமும் உள்ளன.

இதில் மூன்று தொகுதிகள் மலைப் பகுதிகளிலும், மூன்று தொகுதிகள் சமவெளிப் பகுதிகளிலும் உள்ளதால் அரசியல், சமூகம், கலாசாரம், பொருளாதாரம் என அனைத்திலும் சிறிய அளவில் வேறுபாடுகள் உள்ளன. நீலகிரி மாவட்டத்தில் படகர்களும், தாயகம் திரும்பிய தமிழர்களும் தலா சுமார் 35 சதவீதம் உள்ளனர்.

நீலகிரி மாவட்டம், மலைப் பகுதிகளை உள்ளடக்கியதாகும். இங்கு தேயிலைத் தோட்டங்கள் அதிகம் உள்ளதால் விவசாயிகளில் 50 சதவீதம் பேர் தேயிலைத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மலைத் தோட்ட காய்கறி விவசாயமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுற்றுலாத் தொழிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

நீலகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரை, தேயிலைத் தொழிற்சாலைகளைத் தவிர வேறு தொழிற்சாலைகள் எதுவும் இல்லை. தொகுதியில் இருந்த ஒரே பொதுத் துறை நிறுவனமான 'ஹிந்துஸ்தான் போட்டோ ஃபிலிம்' தொழிற்சாலையும் மூடப்பட்டுவிட்டது.

வெற்றி விவரம்:

1957 இல் உருவாக்கப்பட்ட இந்தத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கம்தான் இருந்துவந்தது. மொத்தத்தில் ஏழு முறை காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. 1967 இல் சுதந்திரா கட்சி வென்றுள்ளது. அதன் பிறகு 1971, 2009, 2019 ஆகிய ஆண்டுகளில் திமுகவும், 1977, 2014 ஆகிய ஆண்டுகளில் அதிமுகவும் வென்றுள்ளன. இருமுறை பாஜக வெற்றி பெற்றுள்ளது. 1996 இல் தமாகா வென்றுள்ளது.

கடந்த தேர்தலில்...

2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 2,05,823 வாக்குகள் வித்தியாசத்தில் ஆ.ராசா வென்றார். ஆ.ராசா 5, 47,832 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் எம்.தியாகராஜன் 3,42,009 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் என்.தியாகராஜன் 41,169 வாக்குகளும் பெற்றனர்.

அமைச்சர்கள்:

ஐந்து முறை வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆர்.பிரபு மத்திய இணை அமைச்சராகப் பதவி வகித்துள்ளார். அதேபோல, திமுகவைச் சேர்ந்த ஆ.ராசாவும் மத்திய அமைச்சராகப் பொறுப்பு வகித்துள்ளார்.

வேட்பாளர்கள்: இந்தத் தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர், பகுஜன் சமாஜ் வேட்பாளர்களுடன் சுயேச்சைகள் உள்ளிட்ட 16 பேர் களத்தில் உள்ளனர்.

வெளியூர் வேட்பாளர்கள்:

நீலகிரி மக்களவைத் தொகுதியில் உள்ளூர் வேட்பாளர்களைக் காட்டிலும் வெளியூர் வேட்பாளர்களே அதிக முறை வென்றுள்ளனர். திமுக வேட்பாளர் ஆ.ராசா பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். பாஜக வேட்பாளர் எல்.முருகன் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

ஆ.ராசா (திமுக): திமுக துணைப் பொதுச் செயலரான ஆ.ராசா கட்சியில் செல்வாக்குமிக்கவர், ஏற்கெனவே 2 முறை வென்றுள்ளதால் தொகுதியை முழுவதும் அறிந்தவர் என்பது பலம். இவர் தாயகம் திரும்பிய தமிழர் என்பதால் அவர்களது ஆதரவு கிடைக்கும் என்பதும் பலம். ஹிந்து மதத்துக்கு எதிரான கருத்துகளை அவ்வப்போது தெரிவித்து வருவதால், மாவட்டத்தில் பெரும்பான்மையான படகர் இன மக்களின் அதிருப்திக்கு ஆளாகி உள்ளதாகக் கூறப்படுவது பலவீனம். உதகையில் மேம்பாலம், டைடல் பார்க், ரோப் கார் உள்ளிட்ட வசதிகள் செய்து தருவதாகவும் செக்ஷன் 17 நிலப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதாகவும் கடந்த தேர்தலின்போது ஆ.ராசா அறிவித்தார். இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததும் பலவீனம்.

எல்.முருகன் (பாஜக): எல்.முருகன் மத்திய அமைச்சராக இருப்பதும், கடந்த பல மாதங்களாகவே தொகுதியில் களப் பணியாற்றி வருவதும் பலம். ஆன்மிகப் பிரசாரத்தால் படகர் இனப் பெண்களின் ஆதரவு இவருக்கு பலம்.

லோகேஷ் தமிழ்ச்செல்வன் (அதிமுக): முன்னாள் சட்டப் பேரவைத் தலைவரும் அவிநாசி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருமான ப.தனபால் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் முதல்முறையாக களம் காண்கிறார். அதிமுகவின் நிரந்தர வாக்கு வங்கி இவரது பலம். முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் காலத்தில் இருந்து படகர் கிராமங்களில் ஆண்கள் அதிமுக ஆதரவாளர்கள் என்பது இவருக்கு கூடுதல் பலம். திமுக எதிர்ப்பு வாக்குகளை அதிமுக, பாஜக பிரிப்பதே இருவருக்கும் பலவீனம்.

சீமானின் பேச்சுவன்மையை மட்டுமே நம்பி நாம் தமிழர் வேட்பாளர் களம் இறங்கி உள்ளார்.

நீண்ட கால கோரிக்கைகள்:

பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.35; மூடப்பட்ட டேன்டீ தொழிற்சாலைகள் திறப்பு; மாற்றுத் தொழிலாக அரசு முன்வைத்த மலர் சாகுபடி தொழிலுக்கு ஏற்றுமதி மையம், பதப்படுத்தும் மையம்; உதகை நகரில் வாகன நிறுத்தமிடம், போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு; மருத்துவரீதியான ஹெலிகாப்டர் சுற்றுலாவுக்கு நடவடிக்கை; செக்ஷன் 17 பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு - மின்வசதி இல்லாத கிராமங்களுக்கு மின்வசதி; அரசுப் பொறியியல் கல்லூரி அமைத்தல்; வன விலங்குகள் குடியிருப்புப் பகுதி, விவசாய நிலங்களுக்குள் நுழைவதைத் தடுத்தல்; மேட்டுப்பாளையம் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு; அவிநாசியில் மூடப்பட்டுள்ள நெசவுத் தொழிற்சாலைகளை மீண்டும் திறக்க நடவடிக்கை; அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை உடனடியாக செயல்படுத்துதல்; நீலகிரிக்கு மூன்றாவது மாற்றுப் பாதை திட்டம்.

வாக்காளர்கள் எண்ணிக்கை:

மொத்தம்: 14,20,514

ஆண்கள்: 6,83,832 பெண்கள்: 7,36,586

மூன்றாம் பாலினத்தவர்: 96

2019 தேர்தல் முடிவுகள்

மொத்த வாக்குகள் 13,66,060

பதிவான வாக்குகள் 10,07,774

ஆ.ராசா (திமுக) 5,47,832

எம்.தியாகராஜன் (அதிமுக) 3,42,009

என்.ராஜேந்திரன் (மநீம) 41,169.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com