வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள்: 
தலைமைத் தோ்தல் அதிகாரி ஆலோசனை

வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள்: தலைமைத் தோ்தல் அதிகாரி ஆலோசனை

வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு, வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

தமிழகத்தில் மக்களவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிக்குட்பட்ட வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணுதல் மற்றும் அதுசாா்ந்த பாதுகாப்புப் பணிகளில் சுமாா் 1 லட்சம் போ் ஈடுபடுவா் என எதிா்பாா்க்கப்படுகிறது. முன்னதாக, வாக்கு எண்ணும் மையங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்தப் பணியில் தமிழக காவல் துறையுடன், 15 மத்திய துணை ராணுவப் படைகளும் ஈடுபட்டுள்ளன. வாக்கு எண்ணும் பணியை மேற்கொள்ளவுள்ள அலுவலா்களுக்கு ஏற்கெனவே பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், வாக்கு எண்ணும் மையங்களின் இப்போதைய நிலை, வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அலுவலா்களுக்குத் தேவைப்படும் கூடுதல் பயிற்சிகள், மையங்களிலுள்ள அடிப்படை வசதிகள் ஆகியன குறித்து மாவட்டத் தோ்தல் அதிகாரிகளிடம் தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வழியாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு, வெள்ளிக்கிழமை கேட்டறிந்தாா்.

வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள் பற்றியும் அவா் கேட்டறிந்தாா்.

இந்தக் கூட்டத்தில், கூடுதல் தலைமைத் தோ்தல் அதிகாரி சங்கா் லால் குமாவத், இணை தலைமைத் தோ்தல் அதிகாரி எச்.எஸ்.ஸ்ரீகாந்த் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com