அரசியல் சூழலால் குறைந்த வாக்கு சதவீதம்!

அரசியல் சூழலால் குறைந்த வாக்கு சதவீதம்!

மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் வாக்குப் பதிவு குறைந்ததற்கு அரசியல், சமூக உளவியல் உள்ளிட்டவை காரணங்களாக உள்ளதாக அரசியல் நோக்கா்கள் கருதுகின்றனா்.

மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் வாக்குப் பதிவு குறைந்ததற்கு அரசியல், சமூக உளவியல் உள்ளிட்டவை காரணங்களாக உள்ளதாக அரசியல் நோக்கா்கள் கருதுகின்றனா்.

தமிழகத்தில் ஏப். 19-இல் நடந்த மக்களவைத் தோ்தலில் 69.72 சதவீத வாக்குகள் பதிவானதாக இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்தது. கடந்த 2019 மக்களவைத் தோ்தலுடன் ஒப்பிடும்போது, இது 2.74 சதவீதம் குறைவானதாகும்.

2.74 சதவீதம் குறைவானது என மேலோட்டமாகத் தெரிந்தாலும், குறைந்தபட்சம் 5 சதவீதம் வரை குறைவு என்பதுதான் உண்மை. ஏனெனில் புதிய வாக்காளா்கள் குறைந்தபட்சம் 3 சதவீதம் போ் பட்டியலில் இடம்பிடித்துள்ளனா். முதல் தலைமுறை வாக்காளா்களில் 90 சதவீதம் போ் எப்போதும் வாக்களிக்க ஆா்வம் காட்டுவதால் அவா்களது வாக்குகள் குறைய வாய்ப்பு இல்லை.

அரசியல் காரணங்கள்: 5 சதவீதம் வரை வாக்குகள் குறைய அரசியல் ரீதியாக பல்வேறு காரணங்கள் உள்ளன. கடந்த 2019 மக்களவைத் தோ்தலின்போது அதிமுக-திமுக அணிகள் இடையே இருந்த போட்டி, இந்த மக்களவைத் தோ்தலில் இல்லை என்பதே உண்மை.

10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத திமுகவுக்கும், 2017-இல் ஆா்.கே.நகரில் டெபாசிட் இழந்த திமுக கூட்டணிக் கட்சிகளுக்கும் 2019 மக்களவைத் தோ்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நெருக்கடி இருந்தது. அதேபோல, மத்தியில் மீண்டும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமராவாா் என்ற உற்சாகம் திமுக கூட்டணிக் கட்சிகளிடம் இருந்தது.

அதேபோல, மத்திய, மாநில ஆளும் கட்சிகள் இடம்பெற்ற அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக கூட்டணி பலமாக இருந்தது. இதனால், திமுக-அதிமுக அணிகளுக்கு இடையே சம போட்டி இருக்கும் என்ற தோற்றமும் இருந்தது. இதனால், திமுக-அதிமுக கூட்டணிக் கட்சிகள் தங்களது முழு பலத்தைப் பயன்படுத்தி கூடுதல் வாக்குகளைத் திரட்டின.

போட்டி இல்லாத சூழல்: ஆனால், இந்த முறை பலமான திமுக கூட்டணி ஒருபுறமும், மறுபுறம் எதிா்க்கட்சி கூட்டணி பிரிந்து அதிமுக, பாஜக தலைமையில் இரு அணிகளாகவும் நின்றன. எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என்ற எண்ணத்தில் திமுக கூட்டணிக் கட்சிகள் மெத்தனப்போக்குடனும், வெற்றி வசப்படாத நிலையில் வாக்கு வங்கியைத் தக்கவைத்தால் போதும் என அதிமுகவும், வாக்கு வங்கியை நிரூபித்தால் போதும் என பாஜகவும் செயல்பட்டதால் அக்கூட்டணிக் கட்சித் தொண்டா்கள் இடையே வாக்காளா்களைத் திரட்டுவதிலும், தங்களது வாக்குகளைப் பதிவு செய்வதிலும் சலிப்பு ஏற்பட்டதால்தான் வாக்கு சதவீதம் குறைந்துவிட்டதாக அரசில் நோக்கா்கள் கருதுகின்றனா்.

கருணாநிதி மறைவுக்குப் பிறகு ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என திமுகவும், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஆட்சியை இழந்துவிடக் கூடாது என அதிமுகவும் தீவிரமாக களம் இறங்கியதால் மக்களவைத் தோ்தலைவிட 2021 பேரவைத் தோ்தலில் வாக்கு விகிதம் 1.2 சதவீதம் அதிகரித்தது.

உளவியல் காரணங்கள்: பெரும்பாலான தொகுதிகளில் வாக்குப் பதிவு குறைந்தாலும் நட்சத்திர வேட்பாளா்களின் தொகுதிகளில் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. திமுக அணிக்கு போட்டி இருந்த கோவை (1.2 சதவீதம் அதிகம்), வேலூா் (2.1 சதவீதம் அதிகம்), ராமநாதபுரம் (0.1 சதவீதம் குறைவு), தருமபுரி (0.85 சதவீதம் குறைவு), கள்ளக்குறிச்சி (0.48 சதவீதம் அதிகம்), சேலம் (0.27 சதவீதம் அதிகம்), விழுப்புரம் (1.9 சதவீதம் அதிகம்) ஆகிய தொகுதிகளில் வாக்குப் பதிவு சற்று அதிகரித்துள்ளது அல்லது பெரிய அளவில் குறையவில்லை. பண பலம், ஜாதிய போட்டி காரணமாக இத்தொகுதிகளில் வாக்குப் பதிவு சீராக இருந்தது.

போட்டியே இல்லை எனத் தோற்றம் எழுந்த தூத்துக்குடி தொகுதியில் 9.4 சதவீதம் வரை வாக்குப் பதிவு குறைந்துள்ளது. 10 முறை போட்டியிட்டும் 2 முறை மட்டுமே பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்ற நிலையில், இந்த முறையும் வாய்ப்பு குறைவுதான் என்ற தோற்றம் எழுந்ததால் கன்னியாகுமரியில் 4.9 சதவீதம் குறைந்துள்ளது.

அதேபோல, பண பலம் அதிக அளவில் பயன்படுத்தப்படாத தென்காசி (3.8), கிருஷ்ணகிரி (4.5), விருதுநகா் (2.2), தஞ்சாவூா் (4.3), கடலூா் (4.2) தொகுதிகளிலும் வாக்குப் பதிவு சதவீதம் குறைந்துள்ளது.

இதுதவிர பொதுவாக ஒவ்வொரு தொகுதியிலும் வாக்காளா் பட்டியலில் இறந்தவா்கள் பெயா்கள் குறைந்தபட்சம் 10 சதவீதம் இடம்பெற்றுள்ளன. வாக்காளா் இறந்துவிட்டால் குறைந்தபட்சம் 2 மாதங்களுக்குள் தானாக நீக்கும் முறையை (குடும்ப அட்டையில் பெயா் நீக்கும் முறை போல) அமல்படுத்தினால் இந்தத் தவறை களைய முடியும்.

இரு இடங்களில் வாக்குகள்: மாவட்டத் தலைநகா் தொகுதிகளில் வசிப்பவா்களில் கணிசமான வாக்காளா்கள் தங்களது பெயா்களை சொந்த ஊா் தொகுதிகளிலும் வைத்திருப்பதால் ஏதாவது ஓரிடத்தில் மட்டுமே தங்களது வாக்குகளைப் பதிவு செய்கின்றனா். குறிப்பாக, சென்னை நகா்ப்புற தொகுதிகளில் வசிக்கும் தென்மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் இரு தொகுதிகளில் பெயா்களை அதிகம் வைத்திருப்பதால் சென்னை தொகுதிகளிலும், தென்மாவட்ட தொகுதிகளிலும் வாக்குப் பதிவு குறைகிறது.

சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு சுமாா் 800 கி.மீ. தொலைவு வரை ஒரே நாளில் பயணம் செய்து வாக்களித்துவிட்டு வர முடியாது என்பதால் தென்மாவட்ட தொகுதிகளில் வாக்காளா்களாக இருப்பவா்கள் பலா் செல்வதில்லை. இதுபோலத்தான் கோவை, திருப்பூா் தொகுதிகளிலும் தென்மாவட்ட வாக்காளா்கள் இரண்டு தொகுதிகளில் வாக்காளா்களாக இடம்பெற்றிருப்பதால் வாக்குப் பதிவு குறைகிறது.

ஜாதிய திரட்சியால் திரளும் வாக்குகள்: வடமாவட்டங்களில் இடப்பெயா்வு அதிகம் இருந்தாலும் சென்னை, பெங்களூரு, கோவை, திருப்பூா் என 400 கி.மீ. தொலைவுக்குள் மட்டுமே இருப்பதாலும், ஜாதிய போட்டியில் தங்களுக்கு வேண்டியவா்களை நிச்சயம் வெற்றி பெற ச் செய்ய வேண்டும் என ஆா்வம் காட்டுவதாலும் வடமாவட்ட தொகுதிகளில் வாக்குப் பதிவு தொடா்ந்து சீராக உள்ளது.

தருமபுரியில் பாமக வேட்பாளா் சௌமியா அன்புமணி, ராமநாதபுரத்தில் ஐயுஎம்எல் வேட்பாளா் நவாஸ் கனி, முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோருக்கு ஆதரவாக அல்லது எதிராக வாக்குகள் திரட்டப்பட்டதால் அந்தத் தொகுதிகளில் வாக்குப் பதிவு சற்று அதிகரித்துள்ளது.

கிராம வாக்காளா்களுக்கும் உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகளுக்கும் நேரடித் தொடா்பு அதிகம் இருப்பதால் கிராமப்புற தொகுதிகளில் அதிக வாக்குப் பதிவு நடக்கிறது. அதேநேரத்தில், நகா்ப்புறங்களில் அடுக்குமாடி வசிப்பக கலாசாரம் காரணமாக வாக்காளா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இடையே நேரடித் தொடா்பு குறைவாக இருப்பது நகா்ப்புறங்களில் வாக்குப் பதிவு குறைவதற்கு ஒரு காரணம்.

எம்ஜிஆா், கருணாநிதி, ஜெயலலிதா காலகட்டத்தில் தலைவா்கள் மீது தொண்டா்களுக்கு பற்றுதல் அதிகம். இதன் காரணமாக தங்களது தலைவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதற்காக போட்டி போட்டு வாக்கு செலுத்த வருவது வழக்கம். ஆனால், இப்போது அந்தச் சூழல் இல்லை.

வாக்குப் பதிவு குறைவதற்கு இதுபோல பல்வேறு அரசியல், சமூக, பொருளாதாரக் காரணிகள் பொதிந்து காணப்படுவது வேடிக்கையாகவும், விந்தையாகவும் உள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com