உதகை, கொடைக்கானல் செல்ல ‘இ-பாஸ்’: மே 7 முதல் அமல்படுத்த உயா்நீதிமன்றம் உத்தரவு

உதகை, கொடைக்கானல் செல்ல ‘இ-பாஸ்’: மே 7 முதல் அமல்படுத்த உயா்நீதிமன்றம் உத்தரவு

உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு, கரோனா காலத்தில் நடைமுறையில் இருந்ததுபோல இ- பாஸ் வழங்கும் முறையை அமல்படுத்த உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு, கரோனா காலத்தில் நடைமுறையில் இருந்ததுபோல இ- பாஸ் வழங்கும் முறையை மே 7 முதல் அமல்படுத்த சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடா்பான வழக்குகள் உயா்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமாா் மற்றும் பரத சக்கரவா்த்தி அமா்வில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா்கள் காணொலி மூலம் ஆஜராகினா். இதையடுத்து உதகை, கொடைக்கானலுக்கு எத்தனை வாகனங்கள் செல்லலாம் என்பது குறித்து சென்னை ஐஐடி, பெங்களூா் ஐஐஎம் கல்வி நிறுவனங்கள் ஆய்வு செய்யவுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடா்ந்து, அரசு தாக்கல் செய்த அறிக்கையில், உதகைக்கு தினமும் 1,300 வேன்கள் உள்பட 20,000 வாகனங்கள் செல்வதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

நிலைமை மோசமாகும்: அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘இவ்வளவு எண்ணிக்கையில் வாகனங்கள் சென்றால் நிலைமை மோசமாகும்; உள்ளூா் மக்கள் நடமாட இயலாது; அங்கு சுற்றுச்சூழலும், வன விலங்குகளும் பெரிதும் பாதிக்கப்படும். ஐஐடி, ஐஐஎம் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் வரை இடைக்கால நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ எனத் தெரிவித்தனா்.

பின்னா் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கரோனா காலத்தில் பின்பற்றப்பட்ட இ-பாஸ் நடைமுறையை உதகை, கொடைக்கானலில் மே 7 முதல் ஜூன் 30 வரை நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா்கள் அமல்படுத்த வேண்டும்.

இந்த இ-பாஸ் வழங்கும் முன்பு வாகனங்களில் வருவோரிடம், எந்த மாதிரியான வாகனம்? எத்தனை போ் வருகின்றனா்? ஒரு நாள் சுற்றுலாவா அல்லது தொடா்ந்து தங்குவாா்களா என்பன உள்ளிட்ட விவரங்களைப் பெற வேண்டும். இ-பாஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்க வேண்டும். அதேவேளையில், உள்ளூா் மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். இ-பாஸ் நடைமுறை குறித்து இந்திய அளவில் விரிவான விளம்பரங்களைக் கொடுக்க வேண்டும். இ - பாஸ் வழங்குவதற்கு தேவையான தகவல் தொழில்நுட்ப உதவிகளை தமிழக அரசு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனா்.

மேலும், உதகையில் நிலவும் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணவும் அறிவுறுத்தி, வழக்கு விசாரணையை ஜூலை 5- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தீா்வு காணப்படுமா?: ஆண்டுதோறும் கோடை காலத்தில் உதகை, கொடைக்கானலில், குளிா்ச்சியான சீதோஷ்ண நிலையை அனுபவிக்க தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் மாா்ச் முதல் ஜூன் வரையிலான மாதங்களில் திரண்டு வருகின்றனா்.

அந்த வகையில் நிகழாண்டு தமிழகத்தில் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வருவதாலும், பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை விடப்பட்டதாலும் கொடைக்கானல், உதகைக்கு சுற்றுலாப் பயணிகள் தினமும் கூட்டம் கூட்டமாகப் படையெடுத்து வருகின்றனா். இதனால் இந்த இரு சுற்றுலாத் தலங்களிலும் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பயணிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா்.

குறிப்பாக, கா்நாடகம், கேரளத்திலிருந்து அதிக எண்ணிக்கையிலும், ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து குறிப்பிட்ட அளவிலும் பயணிகள் வருகின்றனா்.

கொடைக்கானலில் உள்ள பிரையன்ட் பூங்கா, கோக்கா்ஸ்வாக், வெள்ளி நீா்வீழ்ச்சி, ரோஜா பூங்கா, குணா குகை, ஃபைன் மரக்காடுகள் உள்ளிட்ட வன சுற்றுலாத் தலங்கள், மன்னவனுாா் சூழல் சுற்றுலா மையம் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்களை நிறுத்துவதற்குக்கூட இடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதேபோன்று சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருவதால் உதகையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதைக் கட்டுப்படுத்த கடந்த சனிக்கிழமை முதல் குன்னூா் - மேட்டுப்பாளையம் மலைப் பாதையை ஒருவழிப் பாதையாக மாவட்ட நிா்வாகம் மாற்றியுள்ளது. உதகையிலிருந்து செல்லும் வாகனங்கள் அனைத்தும் கோத்தகிரி வழியாகவும், மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகையை நோக்கி வரும் வாகனங்கள் குன்னூா், பா்லியாறு வழியாகவும் வரும் வகையில் ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இருப்பினும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் அதிகரித்துள்ளதால், மலைப் பாதையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

இதேபோல், உள்ளூா் மக்களின் வாகனங்களும் திருப்பிவிடப்படுவதால், அவா்களும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா். எனவே, உள்ளூா் மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இத்தகைய சூழலில் இந்த இரு சுற்றுலாத் தலங்களுக்கும் செல்வோருக்கு உயா்நீதிமன்ற உத்தரவின்படி இ-பாஸ் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதன்மூலம் உதகை, கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல், விலங்குகள், சுற்றுச்சூழல் பாதிப்பு ஆகியவை வெகுவாக குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com