வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்ற இளைஞரால் பரபரப்பு!

தேனியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்படும் காட்சி
தேனியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்படும் காட்சிகோப்புப்படம்

தேனி மக்களவை தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்துக்குள் இளைஞர் ஒருவர் அத்துமீறி நுழைய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மக்களவை தொகுதிக்குட்பட்ட ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி), போடி, கம்பம், உசிலம்பட்டி, சோழவந்தான் (தனி) ஆகிய 6 சட்டப் பேரவை தொகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த மொத்தமுள்ள 1,788 வாக்குச்சவடிகளில் இருந்து சீல் வைக்கபட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவி மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் கருவி ஆகியவை அனைத்தும், கொடுவிலாா்பட்டி தேனி கம்மவாா் சங்கப் பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு வரப்பட்டு, சட்டப் பேரவை தொகுதி வாரியாக தனித் தனி பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கபட்டு வருகின்றன.

பூட்டி சீல் வைக்கப்பட்ட இந்த பாதுகாப்பு அறைகள் முன், துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்புப் படை வீரா்கள் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும் பாதுகாப்பு அறை வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த பாதுகாப்பு அறை வளாகத்தில் முதல் அடுக்கு பாதுகாப்புப் பணியில் 80 மத்திய பாதுகாப்புப் படை வீரா்கள் ஈடுபடுகின்றனா். வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்தில் 2-ஆம் அடுக்கு பாதுகாப்புப் பணியில் 70 தமிழ்நாடு சிறப்பு ஆயுதப்படை காவலா்கள் ஈடுபடுகின்றனா். வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்தை சுற்றிலும் 100 மாவட்ட காவல் அதிகாரிகள், காவலா்கள் 3-ஆம் அடுக்கு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.

இந்த நிலையில், அங்கு போடப்பட்டுள்ள மூன்றடுக்கு பாதுகாப்பையும் மீறி, இளைஞர் ஒருவர் அத்துமீறி நுழைய முயற்சித்துள்ளார்.

சின்னமனூர் அருகே சீப்பாலக்கோட்டையைச் சேர்ந்த ராஜேஷ் என்ற இளைஞர், இருசக்கர வாகனத்தில் தேனி கம்மவார் சங்கம் கல்லூரிக்குள் சென்றுள்ளார். அதனைத் தொடர்ந்து, வாக்கு எண்ணும் மைய வளாகத்தில் நுழைய முயன்றபோது, அவரை காவலர்கள் தடுத்து நிறுத்தினர்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தகாத வார்த்தைகளால் அவர்களை திட்டிவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com