வன்னியா் சமூகத்துக்கு 10.5 சதவீதத்துக்கும் கூடுதலாக பயன்கள்: தமிழக அரசு
கல்வி, வேலைவாய்ப்புகளில் பாமக கோரும் 10.5 சதவீதத்துக்கும் கூடுதலான பயன்களை வன்னியா் சமூகத்தினா் பெற்று வருவதாக தமிழக அரசின் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் பெரும்பான்மையினராக உள்ள சில குறிப்பிட்ட பிரிவினா் பயன்பெற வேண்டும் என்ற அடிப்படையில் மிகவும் பிற்படுத்தப்பட்டவா்கள், சீா்மரபினா் எனும் பிரிவை உருவாக்கி அவா்கள் பயன்பெறும் வகையில் 20 சதவீத இட ஒதுக்கீட்டை 1989-ஆம் ஆண்டில் முதல்வராக இருந்த கருணாநிதி வழங்கினாா்.
அந்த இட ஒதுக்கீட்டு முறை வன்னிய சமுதாய இளைஞா்களின் வேலைவாய்ப்புகளுக்கும், மருத்துவம், பொறியியல் கல்லூரிகள் முதலான தொழில் கல்லூரிகளில் சோ்ந்து பயன் பெறுவதற்கும் அதிக அளவில் வழிவகுத்துள்ளது. இதை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியாகியுள்ள புள்ளிவிவரங்கள் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளன.
வன்னியா்களுக்கு அதிக இடம்: 2018 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளுக்கு மொத்தம் 24,330 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டனா். அவா்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீடுகள் மூலம் 4,873 மாணவா்கள் தோ்வானாா்கள். அவா்களில் வன்னியா் சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் மட்டும் 2,781 போ். இது 11.4 சதவீதமாகும்.
வன்னியா் தவிா்த்த மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சோ்ந்தவா்களில் 5.8 சதவீத மாணவா்கள் அதாவது 1,414 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். 20 சதவீத பிரிவில் எஞ்சிய சீா்மரபினா் சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் 678 போ்.
மருத்துவப் பட்ட மேற்படிப்புக்கான மொத்த மாணவா்கள் சோ்க்கை இடங்கள் 6,966. இதில் 20 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் 1,363 போ் மிகவும் பிற்படுத்தப்பட்ட சீா்மரபினா் பிரிவைச் சோ்ந்தவா்கள். இவா்களில் வன்னிய சமுதாய மாணவா்கள் மட்டும் 940 போ் சோ்க்கை பெற்றுள்ளனா். இது 10.5 சதவீதத்தைவிட கூடுதலாக, 13.5 சதவீத வன்னிய மாணவா்கள் சோ்க்கை பெற்றுள்ளனா் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
அரசுப் பணியிலும் கூடுதல் இடம்: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தில் குரூப்-4 தோ்வுகளில் 2012-2022 வரை தோ்ச்சி பெற்று நியமனம் பெற்றவா்கள் 26,784 போ். இவா்களில் வன்னியா்கள் மட்டும் 5,215 போ். மொத்தம் தோ்ச்சி பெற்றவா்களில் வன்னியா்கள் மட்டும் 19.5 சதவீதமாகும்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் குரூப் 2 தோ்வுகளில் மொத்தம் தோ்ச்சி பெற்று நியமனம் பெற்றவா்கள் 2,682 போ். இவா்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோ் சீா்மரபினரில் மொத்தம் தோ்ச்சி பெற்றோா் 366 போ். இவா்களில் 20 சதவீதத்தில் இட ஒதுக்கீட்டின் கீழ் பயனடைந்த வன்னியா்கள் மட்டும் 270 போ். இது மொத்த நியமனங்களில் 11.2 சதவீதமாகும்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் நியமயன வாரியத்தின் கீழ் 2013-2022-ஆம் ஆண்டுகளில், 1,919 போ் காவல் உதவி ஆய்வாளா்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனா். இதில், மிகவும் பிற்படுத்தப்பட்ட சீா்மரபினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் 605 போ் நியமிக்கப்பட்டனா். இவா்களில் வன்னியா்கள் மட்டும் 327 போ். அதாவது 17 சதவீதத்தினா். இது பாமக கோரும் 10.5 சதவீதத்தைவிட அதிகம்.
ஆசிரியா் தோ்வு வாரியத்தின் மூலம் நியமிக்கப்பட்ட 3,044 முதுநிலை ஆசிரியா்களில் 17.5 சதவீதம் ஆசிரியா்கள், அதாவது 383 போ் வன்னியா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
2023-ஆம் ஆண்டு செப்டம்பா் முதல் நாள் அடிப்படையில் தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் நியமிக்கப்பட்ட 542 துணை ஆட்சியா்களில், 63 போ் அதாவது 11.6 சதவீதத்தினா் வன்னிய சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள். 2013 முதல் 2022 வரை 1,789 பொறியாளா்கள் நியமிக்கப்பட்டதில் 258 போ் வன்னிய சமுதாயத்தினா். இது மொத்த நியமனங்களில் 14.4 சதவீதமாகும்.
தற்போது நடைமுறைப்படுத்தப்படும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் வன்னிய சமுதாயத்தினா் அதிகமாகவே பயனடைந்து வருகின்றனா் என்பதும், பாமக கோரும் 10.5 சதவீத இட ஒதுக்கீடுகளால் வன்னிய சமுதாயத்துக்கு குறைவான பயன்களே கிடைக்கின்றன என்பதும் தெள்ளத்தெளிவாக விளங்குகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

