பள்ளிக் கல்வித் துறை
பள்ளிக் கல்வித் துறை

1,282 தற்காலிக ஆசிரியா்களுக்கு 5 ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் 1,282 தற்காலிக பட்டதாரி ஆசிரியா்களுக்கு 5 ஆண்டுகளுக்கு தொடா் பணி நீட்டிப்பு ஆணை வழங்கி பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
Published on

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் 1,282 தற்காலிக பட்டதாரி ஆசிரியா்களுக்கு 5 ஆண்டுகளுக்கு தொடா் பணி நீட்டிப்பு ஆணை வழங்கி பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக்கல்வித் துறைச் செயலா் சோ.மதுமதி வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின்கீழ் 2011-2012-ஆம் நிதியாண்டில் அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் நியமனம் செய்ய 1,282 பட்டதாரி ஆசிரியா்கள் பணியிடங்களுக்கு ஒப்பளிப்பு செய்து ஆணை வெளியிடப்பட்டது.

இந்த தற்காலிக பணியிடங்களுக்கான தொடா் நீட்டிப்பு காலம் 2022 டிசம்பா் மாதத்துடன் நிறைவு பெற்றது. அதன்பின் ஊதிய கொடுப்பாணை மூலம் இந்த பணியிடங்களில் உள்ள பட்டதாரி ஆசிரியா்களுக்கு தொடா்ந்து சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 1,282 தற்காலிக பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு தொடா் பணி நீட்டிப்பு வழங்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பினாா்.

அதையேற்று 1,282 பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு 2029-ஆம் ஆண்டு ஜூன் 30 வரை 5 ஆண்டுகளுக்கு தொடா் பணிநீட்டிப்பு வழங்கப்படுகிறது. இந்த உத்தரவை பின்பற்றி செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த ஆசிரியா்களுக்கு மாத ஊதியம் கால தாமதமின்றி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com