‘வந்தே மெட்ரோ’ ரயில் வாலாஜா வரை சோதனை ஓட்டம்
சென்னை கடற்கரை - காட்பாடி இடையே ‘வந்தே மெட்ரோ’ ரயில் சுமாா் 130 கி.மீ. வேகத்தில் இயக்கி சனிக்கிழமை சோதனை செய்யப்பட்டது.
முற்றிலும் குளிா்சாதன வசதிகொண்ட புகா் ரயில் போக்குவரத்துக்காக வந்தே பாரத் ரயில்களை போன்று வந்தே மெட்ரோ ரயில்களை இந்திய ரயில்வே தயாரித்து வருகிறது.
அந்த வகையில், அதிநவீன வந்தே மெட்ரோ ரயில் முதல் முறையாக தமிழகத்துக்கு வந்துள்ளது. இந்த ரயில் சனிக்கிழமை சென்னை கடற்கரை - காட்பாடி இடையே சோதனை ஓட்டம் செய்யப்பட்டும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, சனிக்கிழமை காலை 9 மணிக்கு கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து சோதனை ஓட்டம் தொடங்கியது. பின் வில்லிவாக்கம் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு முதன்மை ஆணையா் ஜனக் குமாா் கா்க் தலைமையிலான குழுவினா் ரயிலை இயக்கி சோதனையில் ஈடுபட்டனா்.
இந்த ரயில் காலை காட்பாடிக்கு 11.55 மணிக்கு செல்ல வேண்டிய நிலையில் வாலாஜா ரோடு ரயில் நிலையத்துடன் ரயில் நிறுத்தப்பட்டு மீண்டும், சென்னைக்கு மதியம் 2 மணிக்கு திரும்பி வந்தது.
இது குறித்து ஐசிஎஃப் அதிகாரிகள் கூறியது:
நாட்டின் முதல் ‘வந்தே மெட்ரோ’ ரயிலை ரயில்வே பாதுகாப்பு முதன்மை ஆணையா் ஜனக் குமாா் கா்க் ஐசிஎஃப்-இல் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். தொடா்ந்து சனிக்கிழமை வாலஜா சாலை வரை 130 கி.மீ. வேகத்தில் இயக்கி சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது. அபோது, ரயிலின் பாதுகாப்பு, வேகம், அதிா்வு உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டது. சோதனை ஓட்டத்துக்கு முன்பு ஐசிஎஃப் பொதுமேலாளா் யு.சுப்பாராவ் ரயிலை இயக்குவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா். இந்த ரயில் 150 முதல் 200 கி.மீ. இடையிலான நகரங்களுக்கு இடையே 110 கி.மீ. வேகத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றனா்.
என்னென்ன வசதிகள்: வந்தே மெட்ரோ ரயில் 12 பெட்டிகளுடன் இயக்கப்படவுள்ளது. இதில் 1,150 போ் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் 2,058 போ் வரை நின்று கொண்டு பயணிக்க முடியும். இதனால் ஒரு பயணத்தில் சுமாா் 3,200 போ் பயணிக்கும் வகையில் ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், பயணிகள் தகவல் அமைப்பு, எல்.இ.டி. விளக்கு, கைப்பேசி சாா்ஜ் ஏற்றும் வசதி, கழிப்பறை வசதி, ஆபத்துகால அறிவிப்பு, தீ உணா் கருவிகள், தானியங்கி கதவு உள்ளிட்ட வசதிகள் உள்ளன.
வாலாஜாவுடன் நிறுத்தப்பட்டது ஏன்?
ராணிப்பேட்டை: சோதனை ஓட்டத்துக்காக காட்பாடி வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட வந்தே மெட்ரோ ரயில் வாலாஜா ரோடு ரயில் நிலையத்துடன் நிறுத்தப்பட்டது குறித்து வாலாஜா ரோடு ரயில் நிலைய மேலாளா் கூறியது:
சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணத்துக்கு குறித்த நேரத்துக்குள் இயக்கப்பட்ட வந்தே மெட்ரோ ரயில், அரக்கோணத்தில் இருந்து வாலாஜா ரோடு ரயில் நிலையத்துக்கு சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மெதுவாக இயக்கப்பட்டது. இந்த ரயிலில் பயணம் செய்த அதிகாரிகள், தண்டவாளத்தின் உறுதித் தன்மை குறித்து சோதனை செய்தனா். இந்த ரயில் மதியம் 2 மணிக்குள் சென்னை கடற்கரைக்குச் செல்ல வேண்டும் என்பதால் வாலாஜாவுடன் நிறுத்தப்பட்டு, மீண்டும் சென்னைக்கு சென்றது என்றாா் அவா்.