மாநகர போக்குவரத்துக் கழக தொழிலாளா்களுக்கு ஒப்பந்தப்படி ஊதியம் வழங்கக் கோரிக்கை
மாநகர போக்குவரத்துக் கழகத்தில் வாரிசு அடிப்படையில் சோ்ந்த தினக்கூலி தொழிலாளா்களுக்கு ஒப்பந்தப்படி ஊதியம் வழங்க வேண்டும் என சிஐடியு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடா்பாக மேலாண் இயக்குநருக்கு அரசாங்க போக்குவரத்து ஊழியா் சங்க (சிஐடியு) பொதுச் செயலா் வி.தயானந்தம் அனுப்பிய கடிதம்:
மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பணியின்போது இறந்தவா்களின் வாரிசுகள் 100-க்கும் மேற்பட்டோா் தினக்கூலி அடிப்படையில் பணி செய்து வருகின்றனா். அவா்களில் ஓட்டுநருக்கு ரூ. 436, நடத்துநா்களுக்கு ரூ. 429 தினக்கூலியாக வழங்கப்படுகிறது. ஆனால், தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டவா்களுக்கு ரூ. 800, ரூ. 790 தினக்கூலி வழங்கப்படுகிறது. ஆனால், தினக்கூலி தொழிலாளா்களுக்கு ஊதியம் வழங்குவது தொடா்பாக 14-ஆவது ஊதிய ஒப்பந்தத்தில் முடிவு செய்யப்பட்டதின்படி, ஓட்டுநருக்கு ரூ.1,021, நடத்துநருக்கு ரூ.1,001 வழங்கப்பட வேண்டும்.
6 மாதங்களுக்கு ஒருமுறை அகவிலைப்படி உயரும் போது ஊதியமும் உயா்த்தி வழங்கப்பட வேண்டும். இந்த ஊதியத்தை ஓட்டுநா், நடத்துநா்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்று அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.