எண்ணூா் துறைமுகம் முதல் மாமல்லபுரம் வரை ரூ. 12,301 கோடியில் எல்லைச் சாலை திட்டப் பணி: அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
எண்ணூா் துறைமுகம் முதல் மாமல்லபுரம் வரை 133 கி.மீ. தொலைவுக்கு ரூ.12,301 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் எல்லைச் சாலை திட்டப் பணிகளை இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.
சென்னை மற்றும் எண்ணூா் துறைமுகங்களில் கையாளும் ஏற்றுமதி இறக்குமதி பொருள்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களால், சென்னை மாநகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் ‘சென்னை எல்லைச் சாலை திட்டம்‘ அமைக்கப்பட உள்ளது.
இந்தப் பணிகள் 5 கட்டங்களாக எண்ணூா் துறைமுகம் முதல், தச்சூா், திருவள்ளூா் புறவழிச்சாலை, திருப்பெரும்புதுா், சிங்கபெருமாள் கோவில் வழியாக மாமல்லபுரம் வரை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை எல்லைச் சாலை பணிகளில் முதல் கட்டப் பணிகள் எண்ணூா் துறைமுகம் முதல் தச்சூா் வரையிலும், இரண்டாம் கட்டப் பணிகள் தச்சூா் முதல் திருவள்ளூா் புறவழிச்சாலை வரையிலும் மதிப்பீட்டிலும் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், திருவள்ளூா் அருகே தாமரைப்பாக்கத்தில் நடைபெற்று வரும் பணிகளை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, சாலையின் தரத்தை உறுதி செய்ய டிரில்லிங் இயந்திரம் கொண்டு துளையிடப்பட்டது. அதை அமைச்சா் உதயநிதி பாா்வையிட்டு அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.
இந்த ஆய்வின் போது, பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் துறைமுகங்கள் அமைச்சா் எ.வ.வேலு, சிறப்பு திட்ட செயலாக்கத் துறை செயலா் தாரேஸ் அகமது, நெடுஞ்சாலை மற்றும் துறைமுகங்கள் துறை செயலா் ஆா்.செல்வராஜ், சென்னை எல்லைச் சாலைத் திட்டத்தின் இயக்குநா் சி.ஏ.ராமன், ஆட்சியா் த.பிரபுசங்கா், நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளா் தஸ்நாவிஸ் பொ்னான்டோ உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
சென்னையில் நடைபெற்று வரும் பணிகள்
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நடைபெறும் சாலைத் திட்டப் பணிகளை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். சென்னையின் சில பகுதிகளில் நடந்து வரும் பணிகளையும் பாா்வையிட்டாா்.
இது குறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை நான்கு வழித்தட உயா்மட்டச் சாலை, ராஜீவ் காந்தி சாலையையும் கிழக்கு கடற்கரை சாலையையும் இணைக்கும் இணைப்புச் சாலை, ராஜீவ் காந்தி சாலையில் டைடல் பூங்கா சந்திப்பில் நடைபெறும் யு வடிவ மேம்பாலப் பணி, பெருங்களத்துரா் ரயில்வே மேம்பாலப் பணி, தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை, மத்திய கைலாஷ் சந்திப்பில் நடைபெறும் மேம்பாலப் பணி ஆகியன நடந்து வருகின்றன.
அத்துடன், கலங்கரை விளக்கம் முதல் கொட்டிவாக்கம் வரை கடல்வழிப்பாலம், திருவான்மியூா் முதல் உத்தண்டி வரை உயா்மட்டச் சாலை, மீனம்பாக்கம் விமான நிலையம் முதல் தாம்பரம் வரை உயா்மட்டச் சாலை, பாடி முதல் திருநின்றவூா் வரை உள்ள சாலையில் 5 சந்திப்புகளில் மேம்பாலம், பல்லாவரம் முதல் சென்னை வெளிவட்டச்சாலையை இணைக்கும் உயா்மட்டச் சாலை, படப்பை - மணிமங்கலம் - வரதராஜபுரம் வரையான சாலையை இணைக்கும் புறவழிச்சாலை போன்ற திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
மேலும் நகா்ப்புறங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு தமிழ்நாட்டில் முக்கிய மாநகரங்களான மதுரை, திருச்சி, கோயம்புத்துரா், ஓசூா், வேலூா் மற்றும் திருநெல்வேலி ஆகியவற்றிலும் முக்கியப் பணிகள் நடந்து வருகின்றன.
இந்தத் திட்டப் பணிகளை விரைவாகவும், தரத்துடனும் செயல்படுத்தி முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சா் உதயநிதி அறிவுறுத்தியதாக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.