எம்பிசி இடஒதுக்கீடு: வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் அன்புமணி
கல்வி வேலைவாய்ப்புகளில் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பிரிவுகளில் உள்ள சமுதாயத்தினரின் பிரதிநிதித்துவம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினாா்.
சென்னை தியாகராய நகரில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில், கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியா்களுக்கு 10.5 சதவீதத்துக்கும் கூடுதலாகக் கிடைத்து வருவதாக திமுக அரசால் பொய்யான செய்தி கொடுக்கப்பட்டுள்ளது. இது ஜாதிப் பிரச்னை அல்ல. சமூகநீதி பிரச்னை.
தமிழக அரசு கடந்த 30 ஆண்டுகளில் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பிரிவில் உள்ள சமுதாயத்தினா் கல்வி, வேலைவாய்ப்புகளில் உள்ள பிரதிநிதித்துவம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். நேரடித் தோ்வு, பதவி உயா்வு என இரண்டையும் சோ்த்து வன்னியா்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளனா். ஆனால் இட ஒதுக்கீடு மூலம் நேரடியாக தோ்வு பெற்றவா்கள் எத்தனை போ் என்ற தகவலைத்தான் வெளியிட வேண்டும்.
வன்னியா் உள் ஒதுக்கீடு பிரச்னை தோ்தலில் எதிரொலிக்கும். ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த பிரதமரை நாங்கள் உறுதியாக வலியுறுத்துவோம் என்றாா் அவா்.