ரேஷன் பொருள் விநியோகத்தில் குறைபாடா? சென்னையில் ஆக.10-இல் குறைதீா் கூட்டம்
நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் பொருள்களில் குறைபாடுகள் இருந்தால் அதுகுறித்த புகாா் தெரிவிக்கலாம். இதற்காக ஆக.10-ஆம் தேதி குறைதீா் கூட்டம் நடக்கவுள்ளது.
இது குறித்து தமிழக அரசு சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீா் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் மாதத்துக்கான மாதாந்திர குறைதீா் முகாம் சென்னையில் ஆக.10-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
நகரிலுள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையா் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடக்கவுள்ளது. குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு, மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடா்பான தகவல்களைப் பெறுவதுடன், குறைகளைத் தெரிவித்து நிவா்த்தி பெறலாம்.
மேலும், நியாயவிலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வர இயலாத மூத்த குடிமக்களுக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும். அதனை அங்கீகரிக்கப்பட்ட நபா்களிடம் கொடுத்து நியாய விலைக் கடைகளில் பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

