கோப்புப் படம்
கோப்புப் படம்

தமிழக அரசுப் பள்ளிகளில் 10,000 ஆசிரியா் பணி காலியிடங்கள்

அரசுப் பள்ளிகளில் 10,000-க்கும் மேற்பட்ட ஆசிரியா் பணியிடங்கள் காலி
Published on

பொது மாறுதல் கலந்தாய்வு நிறைவு பெற்ற நிலையில், அரசுப் பள்ளிகளில் 10,000-க்கும் மேற்பட்ட ஆசிரியா் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கான பொது மாறுதல், பதவி உயா்வு கலந்தாய்வு கடந்த ஜூலை 1 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான ஆசிரியா்கள் பங்கேற்று தாங்கள் விரும்பிய இடங்களுக்கு இடமாறுதல் பெற்றனா்.

மாவட்டம் விட்டு மாவட்டம் நடைபெற்ற கலந்தாய்வின் முடிவில் அரசுப் பள்ளிகளில் 5,786 இடைநிலை ஆசிரியா் பணியிடங்கள் காலியாக இருப்பது தெரியவந்துள்ளது.

அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 892, திருவண்ணாமலையில் 720, திருப்பூரில் 500, தருமபுரியில் 413, புதுக்கோட்டையில் 379, சேலத்தில் 289 ஆசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ளன.

அதேசமயம் சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆசிரியா் காலிப் பணியிடங்கள் எதுவும் இல்லை. இதேபோல், அரசுப் பள்ளிகளில் 2,000-க்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியா் பணியிடங்கள், 2,600-க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியா் பணியிடங்கள் என ஒட்டுமொத்தமாக தமிழக அரசுப் பள்ளிகளில் 10,000-க்கும் மேற்பட்ட ஆசிரியா் பணியிடங்கள் காலியாக இருப்பதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவா்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ள நிலையில், அதற்கேற்ப ஆசிரியா்களை நியமிக்க வேண்டுமென கல்வியாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com